தமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழு (டிட்டோஜாக்) சார்பில், 20 அம்ச கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்ற வலியுறுத்தி மாநிலம் தழுவிய அளவில் அனைத்து மாவட்டங்களிலும் வட்டாரக் கல்வி அலுவலகங்கள் முன்பு மாபெரும் கவனஈர்ப்பு கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதன் ஒரு பகுதியாக, தேனி மாவட்டம் சின்னமனூர் ஒன்றிய டிட்டோஜாக் சார்பில் சின்னமனூர் உழவர் சந்தை அருகில் அமைந்துள்ள நகராட்சி நடுநிலைப்பள்ளி வளாகத்தில் கவனஈர்ப்பு கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம் சிறப்பாக நடைபெற்றது.
இப்போராட்டத்திற்கு தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி திரு.அ.மணிகண்டன் மற்றும் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி திருமதி.M.ஜீனத் பாலீஸ் ஆகியோர் தலைமை தாங்கினர்.
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி திரு.ஜோ.கண்ணன் மற்றும் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி திரு.ப.பால்பாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இக்கூட்டத்தில் டிட்டோஜாக் இணைப்பு சங்கங்களின் மாநில மற்றும் மாவட்ட பொறுப்பாளர்கள் கலந்து கொண்டு போராட்ட விளக்கவுரையாற்றினர்.
ஆற்றல்மிக்க ஆசிரியர் பேரினமே… நாம் வென்றெடுத்த கோரிக்கைகள் அனைத்தும் போராட்டங்கள் வாயிலாக பெற்றவையே, போராட்டங்கள் இல்லாமல் எந்தக் கோரிக்கையையும் வென்றெடுத்ததில்லை என்ற வரலாற்றினை மனதில் கொண்டு, புதிய அரசில் நமது கோரிக்கைகளை வென்றெடுத்திட டிட்டோஜாக் பேரமைப்பு விடுத்த அழைப்பின் பேரில் இக்கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான ஆசிரியர்கள் திரளாகக் கலந்துகொண்டு எழுச்சியுடன் கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனர். இதற்கான ஏற்பாடுகளை இணைப்பு சங்கங்களின் வட்டார செயலாளர்கள் செய்திருந்தனர்.




