தேனி மாவட்டம், சின்னமனூர் நகராட்சி அலுவலகத்தை ஒட்டிய பகுதியில் அமைந்துள்ள வாரசந்தை, வாரந்தோறும் வியாழக்கிழமைகளில் மட்டுமே இயங்கி வருகிறது. பல லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அண்மையில்தான் இந்த சந்தைக்குப் புதிய கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டது. ஆனால், கட்டிடம் கட்டப்பட்டு சில காலத்திலேயே ஆங்காங்கே கைப்பிடி சுவர்கள் இடிந்து விழும் நிலையில் உள்ளன.

கட்டிட பணியில் சரியான முறையில் கலவை பயன்படுத்தப்படாமல் முறைகேடு நடந்துள்ளதோ என்ற சந்தேகத்தை இந்த அவல நிலை ஏற்படுத்தியுள்ளதுடன், முறையான பராமரிப்பும் இன்றி முடங்கி கிடக்கிறது. இந்த வாரசந்தைக்கு மூன்று பக்கங்களில் பாதைகள் உள்ள நிலையில், ஒரே ஒரு பாதையில் மட்டுமே கதவு அமைக்கப்பட்டுள்ளது. மற்ற இரண்டு பாதைகளும் எவ்வித தடுப்பும் இன்றி திறந்தவெளியாகவே விடப்பட்டுள்ளன.

இதன் காரணமாக, வியாழக்கிழமை சந்தை நடைபெறும் ஒரு நாளை தவிர்த்து, மீதமுள்ள 6 நாட்களும் இது கட்டணமில்லாத திறந்தவெளி மதுபானக்கூடமாகவே செயல்பட்டு வருகிறது. தினமும் காலை 6 மணி முதல் இரவு வரை சட்டவிரோதமாக மது அருந்துவதும், காலி பாட்டில்களை ஆங்காங்கே உடைத்து போட்டு செல்வதும் தொடர்கதையாக உள்ளது. இதனால், புதன்கிழமை மாலையிலேயே பொருட்களை கொண்டுவந்து இறக்கும் வியாபாரிகளும், பொதுமக்களும் பெரும் அச்சத்திற்கு ஆளாகியுள்ளனர். மதுபானம் மட்டுமன்றி, பல்வேறு சமூக விரோத செயல்களின் புகலிடமாகவும் இந்த வளாகம் மாறியுள்ளது.
நகராட்சி அலுவலகத்தின் மாடியிலிருந்தோ அல்லது ஜன்னல் வழியாக பார்த்தாலோ தெளிவாக தெரியும் தூரத்தில்தான் இந்தச் சட்டவிரோத செயல்கள் அனைத்தும் தடையின்றி நடக்குகின்றன. நகராட்சி நிர்வாகத்தின் கண்முன்னே இவ்வளவு அத்துமீறல்கள் நடந்தும், அதிகாரிகள் இதை கண்டு கொள்ளாமல் மௌனம் காப்பது ஏன் என்று பொதுமக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
இந்த சந்தை உண்மையில் யார் கட்டுப்பாட்டில் இருக்கிறது? வாரத்தில் ஒரு நாள் மட்டுமே இயங்கும் சந்தையின் மீதி 6 நாட்கள் கதவுகள் மூடப்படாமல் திறந்தே வைக்கப்படுவதன் பின்னணி என்ன? சமூக விரோத செயல்கள் தடையின்றி நடக்க நகராட்சி நிர்வாகம் மறைமுகமாக ஆதரவு அளிக்கிறதா அல்லது இதற்காக மறைமுகக் கட்டணம் எதுவும் வசூலிக்கப்படுகிறதா என்ற பகிரங்க குற்றச்சாட்டையும் சமூக ஆர்வலர்கள் முன்வைக்கின்றனர்.
நகராட்சி பணியாளர்கள் அல்லது அதிகாரிகளுக்கு உள்ளே வேலை இருந்தால், அனைத்து வழிகளிலும் முறையான கதவுகளை அமைத்து பூட்டி, அதற்கான சாவி நகராட்சி அலுவலக கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும். தேவைப்படும்போது மட்டும் திறந்துவிட்டு மீண்டும் பூட்டுவதே முறையான நிர்வாகத்திற்கு அழகாகும். அதை விடுத்து, எவ்வித பயன்பாடும் இன்றி இந்த வளாகத்தை திறந்தவெளியாக போட்டு வைத்திருப்பது சமூக விரோதிகளுக்கு நகராட்சி நிர்வாகமே வழிவகுத்து கொடுப்பது போல் உள்ளது.
ஆண்டாண்டு காலமாக தொடரும் இந்த அவலநிலைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், தேனி மாவட்ட ஆட்சியர் உடனடியாக தலையிட்டு ஆய்வு நடத்த வேண்டும். புதிய கட்டிட கட்டுமானத்தில் நடந்த முறைகேடுகள் குறித்து விசாரிக்கவும், சந்தையின் அனைத்து பாதைகளிலும் உடனடியாக பூட்டுடன் கூடிய இரும்புக் கதவுகளை அமைத்து நகராட்சியின் நேரடிக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரவும், இத்தகைய சமூக விரோத செயல்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவும் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் தீவிர கோரிக்கை விடுத்துள்ளனர்.





