• Fri. Aug 21st, 2026
WhatsAppImage2026-08-20at214238
previous arrow
next arrow
Read Now

சின்னமனூர் ஆட்டோ ஓட்டுநர்களை ஒழுங்குபடுத்த காவல்துறையினருக்கு கோரிக்கை!

தேனி மாவட்டம் சின்னமனூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் சுமார் 300-க்கும் மேற்பட்ட ஆட்டோக்கள் இயங்கி வருகின்றன. பொதுமக்கள் மற்றும் பயணிகளின் அன்றாட போக்குவரத்து தேவைகளுக்கு ஆட்டோக்கள் முக்கிய பங்கு வகித்து வரும் நிலையில், சில ஆட்டோ ஓட்டுநர்களின் முறையற்ற நடவடிக்கைகளால் ஒட்டுமொத்த ஆட்டோ ஓட்டுநர்களின் பெயரும் பாதிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

குறிப்பாக, சில ஆட்டோ ஓட்டுநர்கள் மதுபோதையில் வாகனங்களை இயக்குவது, உரிய ஓட்டுநர் உரிமம் (Licence) இல்லாமல் ஆட்டோ ஓட்டுவது, காப்பீடு (Insurance), தகுதிச்சான்று (FC) மற்றும் அனுமதிச் சீட்டு (Permit) ஆகியவை இன்றி வாகனங்களை இயக்குவது போன்ற சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், பயணிகளிடம் அதிக வாடகை வசூலிப்பது, பொதுமக்களிடம் மரியாதை குறைவாக நடப்பது போன்ற செயல்களாலும் பொதுமக்கள் பெரிதும் அவதிக்குள்ளாகின்றனர்.
நேர்மையான முறையில் தொழில் செய்து வரும் ஆட்டோ ஓட்டுநர்கள், “ஆட்டோ தொழிலாளர்களின் ஏழ்மை நிலையை கருத்தில் கொண்டு காவல்துறை சில நேரங்களில் பெருந்தன்மையுடன் மென்மையான போக்கை கடைப்பிடிக்கிறது.

ஆனால், அதை சிலர் தவறாக பயன்படுத்தி கொண்டு இதுபோன்ற விதிமீறல்களில் ஈடுபடுகின்றனர். இதனால் முறைப்படி ஆவணங்களை வைத்துக்கொண்டு நேர்மையாக தொழில் செய்யும் நல்ல ஓட்டுநர்களுக்கும் கெட்ட பெயர் ஏற்படுகிறது” என ஆதங்கத்துடன் தெரிவிக்கின்றனர்.

எனவே, பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், ஆட்டோ தொழிலின் நம்பக தன்மையை பாதுகாக்கவும் சின்னமனூர் காவல்துறையினரும், உத்தமபாளையம் வட்டார போக்குவரத்து ஆய்வாளரும் (RTO) இணைந்து அதிரடி தணிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். குறைந்தபட்சம் மூன்று மாதங்களுக்கு ஒருமுறையாவது இதுபோன்ற தொடர் வாகன சோதனைகளை நடத்த வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.