• Sun. Feb 9th, 2025

பெண்களின் திருமண வயது 9… ஈராக் அரசின் அதிரடி முடிவுக்கு கடும் எதிர்ப்பு

ByIyamadurai

Jan 23, 2025

ஈராக்கில் பெண்களின் திருமண வயதை 9 ஆக குறைத்து நாடாளுமன்றத்தில் சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மேற்காசிய நாடான ஈராக் நாடாளுமன்றத்தில், ஷியா முஸ்லிம் பழமைவாத குழுவினர் பெரும்பான்மை வகிக்கின்றனர். இந்நாட்டில் முகமது ஷியா அல் சுடானி பிரதமராக உள்ளார்.

இந்த நாட்டில், பெண்களுக்கான திருமண வயது வரம்பு, 18 ஆக உள்ளது. கடந்த 1950- ம் ஆண்டு குழந்தை திருமணம் தடை செய்யப்பட்டாலும், 28 சதவீத பெண்கள் 18 வயதுக்கு முன்பாகவே திருமணம் செய்து கொள்வதாக, 2023 ஐ.நா ஆய்வறிக்கை தெரிவித்திருந்தது.

இந்நிலையில், ஈராக்கில் பெண்ணின் திருமண வயதை 18ல் இருந்து 9 ஆக குறைக்க சட்ட திருத்தம் செய்ய அந்நாட்டு நாடாளுமன்றத்தில் முடிவு எடுக்கப்பட்டு மசோதா தாக்கதாக்கல் செய்யப்பட்டது. ஈராக் அரசின் இந்த முடிவுக்கு பெண்கள், மனித உரிமை குழுக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். எனினும் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபித்து பெண்களின் திருமண வயதில் திருத்தங்கள் செய்துள்ள இந்த மசோதாவை சட்டமாக இயற்றும் முயற்சிகளில் ஈராக் அரசு ஈடுபட்டு வந்தது.

இந்த நிலையில், ஈராக்கில் பெண்களின் திருமண வயது 18 ஆக இருந்த நிலையில், அந்நாட்டில் பெரும்பான்மையாக வசிக்கும் ஷியா முஸ்லிம் பெண்களின் திருமண வயது 9 ஆகவும், சன்னி முஸ்லிம் பெண்களின் திருமண வயது 15 ஆகவும் குறைத்து சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.

மேலும், திருமணம், விவாகரத்து உள்ளிட்ட குடும்ப விவகாரங்கள் குறித்து முடிவெடுத்துக் கொள்ள இஸ்லாமிய நீதிமன்றங்களுக்கு அதிக அதிகாரத்தை வழங்கும் வகையில் திருத்தங்களை கொண்டு வந்துள்ளனர்.

நீதியை மேம்படுத்துவதற்கும், மக்களின் அன்றாட வாழ்க்கையை ஒழுங்குப்படுத்துவதற்கும் மேற்கொள்ளப்பட்ட முக்கியமான நடவடிக்கைதான் இந்த சட்டம் என்று ஈராக் நாடாளுமன்றத் தலைவர் தெரிவித்துள்ளார். பல நாடுகளில் பெண்களின் திருமண வயதை 18-ல் இருந்து மேலும் அதிகரிக்க
நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், ஈராக்கில் குழந்தை திருமணச் சட்டத்துக்கு ஒப்புதல் அளித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.