சபரிமலையின் பொன்னம்பல மேட்டில், மகர ஜோதி ஏற்றப்பட்டது. பக்தர்கள் பரவசத்துடன் தரிசனம் மேற்கொண்டனர்.
சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு ஆண்டுதோறும் கார்த்திகை மாதம் மாலை அணிந்து விரதம் இருந்து பக்தர்கள் யாத்திரை செல்வது வழக்கம். சபரிமலை அய்யப்பன் கோவிலில் மகர விளக்கு பூஜை மற்றும் மகர ஜோதி தரிசனம் இன்று (வெள்ளிக்கிழமை) நடக்கிறது. மகர விளக்கு பூஜையின் போது அய்யப்பனுக்கு அணிவிக்கப்படும் தங்க ஆபரணங்கள் (திருவாபரணங்கள்) அடங்கிய 3 பெட்டிகள் பந்தளம் வலிய கோயிக்கல் சாஸ்தா கோவிலில் இருந்து நேற்று மதியம் 1 மணிக்கு ஊர்வலமாக புறப்பட்டது. திருவிதாங்கூர் தேவஸ்தானத்தின் சார்பில் தேர்வு செய்யப்பட்ட அய்யப்ப பக்தர்கள் தலைச்சுமையாக எடுத்துச் சென்றனர்.
சபரிமலை ஐயப்பன் கோவில் நிகழ்ச்சியிலே மகரஜோதியை காண்பதற்காக ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவர். அந்த வகையில், இன்று ஜன.,14 மாலை, 6:45 மணிக்கு பொன்னம்பல மேட்டில், மகர ஜோதி ஏற்றப்பட்டது. மகர ஜோதி தரிசனத்தை பக்தர்கள் பரவசத்துடன் தரிசித்தனர்.
மகர விளக்கு பூஜை மற்றும் மகரஜோதி தரிசனத்திற்காக சிறப்பு ஏற்பாடுகள், பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. மகரவிளக்கு பூஜையின்போது ஐயப்பனுக்கு அணிவிப்பதற்காக திருவாபரணங்கள் எனப்படும் தங்க ஆபரணங்கள் அடங்கிய 3 பெட்டிகள் இன்று மாலை சபரிமலை வந்து சேர்ந்தது.திருவாபரண பெட்டிகளுக்கு பக்தர்கள் உற்சாக வரவேற்பும் அளித்தனர்.