
சபரிமலையில் இன்று மகரஜோதி தரிசனமும், மகரவிளக்கு பூஜையும் நடைபெறவுள்ளதால் பக்தர்களின் கூட்டம் அலைமோதி வருகிறது.

தை மாதம் முதல் நாளில் சபரிமலையில் மகரஜோதி தரிசனம் நடைபெறுவது வழக்கம். அதன்படி இன்று மாலை பொன்னம்பலமேட்டில் ஒளிரும் மகரஜோதியை காண லட்சக்கணக்கான பக்தர்கள் சபரிமலையில் குவிந்த வண்ணம் உள்ளனர்.
மேலும் பக்தர்களின் சரண கோஷம் முழங்க ஆபரண பெட்டிகள் இன்று மாலை 6 மணிக்கு சபரிமலை சன்னிதானம் கொண்டு செல்லப்படுகிறது. தொடர்ந்து பதினெட்டாம் படி வழியாக கொண்டு செல்லப்படும் திருவாபரணங்களை தந்திரியும், மேல்சாந்தியும் பெற்றுக்கொள்வர்.
பின்பு அய்யப்பனுக்கு ஆபரணங்கள் அணிவிக்கப்பட்டு தீபாராதனை பூஜை நடைபெற்ற பிறகு பொன்னம்பலமேட்டில் மகரஜோதி தரிசனம் காட்சி நடைபெறும். இந்நிலையில் சன்னிதானம், பம்பை உள்ளிட்ட 8 இடங்களில் இருந்து பக்தர்கள் மகர ஜோதியை தரிசனம் செய்வதற்கு சிறப்பு ஏற்பாடுகளும் கேரள அரசு சார்பில் செய்யப்பட்டுள்ளது.

