• Mon. Apr 21st, 2025

கே.டி.ராஜேந்திரபாலாஜியிடம் சரணடைகிறாரா மாஃபா?- வைரலாகும் கடிதம்!

ByP.Kavitha Kumar

Mar 17, 2025

விருதுநகர் நகர தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் பாசறை சரவணனுக்கு முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் எழுதியுள்ள கடிதம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர் மாவட்டத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜிக்கு எதிராக முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் செயல்படுகிறார் என்று கட்சி நிர்வாகிகள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றனர். இந்த நிலையில், அதிமுக நகர தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் பாசறை எஸ்.சரவணன், அரசியல் டுடேவுக்கு அளித்த பேட்டியில்,” 2 நாளைக்கு முன் தேசபந்து மைதானத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. விருதுநகர் மேற்கு மாவட்டச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.டி.ராஜேந்திரபாலாஜி தலைமையில் இந்த விழா நடைபெற்றது. தலைமைக்கழகம் அறிவித்த நிர்வாகிகள் விழாவில் கலந்து கொண்டனர். முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜனும் கலந்து கொண்டார். மாவட்டச் செயலாளருக்கு அனைவரும் சால்வை அணிவித்தனர். போட்ட சால்வையையே மீண்டும் போடச்சொல்லி கீழிருந்து ஒருவர் சொல்லிக் கொண்டிருந்தனர். வெளியே பார்த்தால், நல்லாயிருக்காதே என்று அப்படி பழைய சால்வையை போட வந்தவரை, போட்ட சால்வையை போடாதீங்கப்பா என மாவட்ட செயலாளர் தள்ளி விட்டார். இதுதான் நடந்தது.

மாஃபா பாண்டியராஜன் எழுதியுள்ள கடிதம்

விருதுநகர் சட்டமன்றத் தொகுதிக்குள் தலைமைக் கழகம் சொல்லி பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சொல்வதை முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி நிறைவேற்றி வருகிறார். ஆனால், முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தன்னிச்சையாக செயல்பட்டு வருவதுடன் தனி அரசியலை பத்து பேரை வைத்து நடத்தி வருகிறார். மாவட்ட செயலாளர் என்ன சொல்கிறாரோ அதைக் கேட்டு தான் பணியாற்ற வேண்டும் என்பது தான் கட்சியின் வழிகாட்டுதலாகும். ஏனெனில், இது அதிமுக. ஆனால், சிறுவட்டத்திற்குள் அரசியல் நடத்துகிறார் மாஃபா பாண்டியராஜன். அதிமுக என்பது ஆலமரம். அதை அறிந்து அவர் அரசியல் செய்ய வேண்டும்” என்று கூறியிருந்தார்.

இந்த நிலையில், அதிமுக நகர தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் பாசறை எஸ்.சரவணனுக்கு முகநூலில் முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் ஒரு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், ” அன்புத்தம்பி பாசறை சரவணனுக்கு உன் அண்ணன் மாஃபா பாண்டியராஜனின் விடை. இந்த வாரம் வெள்ளி, சனி மட்டும் வந்து விட்டு கழகத்தொண்டர்கள், நிர்வாகிகள் இல்ல மற்றும் பொதுநிகழ்வுவுகள் 11-ல் கலந்து கொண்டு விட்டு சென்னைத் திரும்பி விட்டேன்.

நமது மதிப்பிற்குரிய மாவட்ட செயலாளர் கோவை விமான நிலையத்தில் தெளிவுபடுத்தியது போல, அவர் சிவகாசி நிகழ்வில் பேசியது என்னைப் பற்றியல்ல. காங்கிரஸிலும், தமாகாவிலும் என்றும் நான் இருந்ததில்லை. என் அரசியல் வாழ்விற்கு அடையாளம் தந்த புரட்சித்தலைவி அம்மாவை என்றும் நான் இழிந்து பேசியதில்லை. மூன்று தலைமுறைகளாக விருதுநகர் கல்போது கிராமத்தில் வேர்பிடித்து வாழ்ந்த குடும்பம் எனது. அய்ய நாடார் மகன் கணேச நாடார் மகன், கருப்பசாமி நாடார் மகன் பாண்டியராஜனாகிய நான் பிறந்து வளர்ந்தது சிவகாசி தொகுதியில் உள்ள விளாம்பட்டியில் தான்.

விருதுநகர் மக்களுக்கு சேவை செய்ய அம்மா அவர்கள் இந்த தொகுதியில் தோழமைக்கட்சியின் சார்பில் சட்டமன்ற உறுப்பினராக வாய்ப்பு தந்தார். அதே போல் ஆவடியில் அசைக்க முடியாத திமுக தலைவர் ஒருவரை தோற்கடிக்க நான் தகுதி படைத்தவன் என்று அம்மாவின் விருப்பப்படி என் விருப்பமனு விருதுநகராக இருந்தாலும்,கட்சிக்காக ஆவடி சென்று போட்டியிட்டு வென்றேன்.

கடந்த 2021 மே மாதம் முதல் கழகப்பொதுச்செயலாளர் உத்தரவின்படி விருதுநகர் தொகுதியில் எனது வாக்குரிமையினை மாற்றிக் கொண்டு இங்கே கழகப்பணியாற்றி வருகிறேன். உதவி என்று வந்த எந்த கழக நிர்வாகிக்கும் என்னால் இயன்ற உதவியைச் செய்து வருகிறேன் என்று உங்கள் மனசாட்சி அறியும். இது முடிந்து போன பிரச்சினை என்ற மாவட்டச் செயலாளரின் வார்த்தையை மதித்து நமது வருத்தங்களைக் கடந்து செல்வோம். இரட்டை இலையினை வெற்றி பெற வைக்க ஒன்றுபட்டு உழைப்போம்” என்று கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். இந்த கடிதம் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.