• Sat. Apr 20th, 2024

விரைவில் பயன்பாட்டுக்கு வரும் மதுரை பெரியார் பேருந்து நிலையம்

Byகுமார்

Nov 20, 2021

மதுரையில் 1200 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. பெரியார் பேருந்து நிலையம் மேம்படுத்துதல், குன்னத்தூர் சத்திரம், வைகை ஆற்றை சீரமைத்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. மேலும் அம்ருத் திட்டத்தின் கீழ் முல்லைப்பெரியாறு கூட்டுக்குடிநீர் திட்டம் நடைபெற்று வருகிறது. இந்தப்பணிகளை நகராட்சி நிர்வாக இயக்குனர் பொன்னையன் இன்று நேரில் ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வின் போது 159 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மதுரை பெரியார் பேருந்து நிலையத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் கட்டுமான பணிகள் மற்றும் கார் மற்றும் இருசக்கர வாகன நிறுத்தங்கள் மற்றும் போக்குவரத்து கட்டுப்பாட்டு அறை மற்றும் 57 பேருந்து நிறுத்தங்கள் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்தார்.

அதனைத் தொடர்ந்து மேலவாசல் பகுதியில் கட்டப்படும் முல்லைப்பெரியாறு குடிநீர் தேக்க தொட்டி கட்டுமான பணிகளை ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது மாநகராட்சி ஆணையாளர் கார்த்திகேயன் மற்றும் நகர பொறியாளர் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

பின்னர் நகராட்சி நிர்வாக இயக்குனர் பொன்னையன் செய்தியாளர்களை சந்தித்து பேசும்போது, மதுரை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் பெரியார் பேருந்து நிலைய பணிகள் 95 சதவீதம் நிறைவடைந்து உள்ளது. விரைவில் மக்கள் பயன்பாட்டுக்கு பெரியார் பேருந்து நிலையம் கொண்டு வரப்பட உள்ளது.

மதுரை மாநகர பகுதியில் ஸ்மார்ட் சிட்டி கீழ் பணிகள் ஆய்வு செய்யப்படுகின்றன. மதுரையில் நடைபெற்று வரும் ஸ்மார்ட் சிட்டி பணிகள் நல்ல முறையில் நடைபெற்று வருகின்றன. கால்நடைகள் சாலைகளில் திரிவதை கட்டுப்படுத்த அந்தந்த ஊரக உள்ளாட்சி அமைப்புகள் மூலம் நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஏற்கனவே திட்டமிட்டபடி பெரியார் பேருந்து நிலைய பணிகள் நடைபெறுகின்றன. பேருந்து நிலைய பணிகளில் எந்த மாற்றம் இல்லை. நான்கு அல்லது ஐந்து மாதங்களில் முழுமையாக பணிகள் நிறைவடையும்.

மதுரை மாநகர் பகுதியில் உள்ள சாலைகள் குண்டும் குழியுமாக உள்ளதாக என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், மதுரையில் 328 சாலைகள் அமைக்க டெண்டர் விடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *