மதுரை மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு மீண்டும் இணை கமிஷனர் நியமிக்கப்பட்டார். மீனாட்சி அம்மன் கோவில் தமிழகத்தில் உள்ள முக்கியமான முதுநிலை கோவில்களான மீனாட்சி அம்மன் கோவில், ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவில், திருத்தணி முருகன் கோவில், சென்னை தேவி கருமாரியம்மன் கோவில் ஆகிய கோவில்களில் இணை கமிஷனர் அந்தஸ்தில் அதிகாரிகள் நியமிக்கப்பட்டு வந்தனர். இந்த நிலையில் கடந்த ஆண்டு மே மாதம் இந்த 4 கோவில்களும் திடீரென்று துணை கமிஷனர் அந்தஸ்தில் பதவி இறக்கம் செய்யப்பட்டது.
அதன்படி மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு தென்காசி மாவட்டம் பண்மொழி திருமலைக்குமார சுவாமி கோவிலில் உதவி கமிஷனர் அருணாசலம் பதவி உயர்வு பெற்று துணை கமிஷனராக நியமிக்கப்பட்டார். மீனாட்சி அம்மன் கோவில் அதிகாரி பணியிடம் தகுதி குறைப்பு செய்யப்பட்டதற்கு பல்வேறு தரப்பிலும் எதிர்ப்பு கிளம்பியது. இதனால் கோவிலில் நடைபெறும் வளர்ச்சி பணிகள் தடைபடும் என்றும், துணை கமிஷனர் அந்தஸ்தில் நியமிக்கப்பட்ட அதிகாரியால் தன்னிச்சையாக எந்த வித முடிவும் எடுக்க முடியாது என்றும் தெரிவிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து தற்போது தமிழக அரசு தமிழகத்தில் உள்ள கோவில்களில் காலியாக உள்ள இணை கமிஷனர் பணியிடங்களுக்கு அதிகாரிகளை நியமித்தது. அதன்படி 15 துணை கமிஷனர்கள், இணை கமிஷனர்களாக பதவி உயர்வு பெற்று பல்வேறு கோவில்களுக்கு நியமிக்கப்பட்டனர். அதில் திண்டுக்கல் மாவட்ட இந்து சமயஅறநிலையத்துறை சரிபார்ப்பு துறையில் துணை கமிஷனராக இருந்த கிருஷ்ணன் பதவி உயர்வு பெற்று மதுரை மீனாட்சி அம்மன் கோவில் இணை கமிஷனராக நியமிக்கப்பட்டார்.