காவலர்களுக்கு ஆணையம் அமைக்க உத்தரவு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
கரூரைச் சேர்ந்த ஓய்வுபெற்ற தலைமைக் காவலர் மாசிலாமணி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், தமிழக காவல்துறையில் காவலர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். காலிப்பணியிடங்கள் நிரப்ப வேண்டும். காவலர்களின் ஊதியத்தை உயர்த்த அரசுக்கு உத்தரவிட வேண்டும் என தெரிவித்து இருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் என்.கிருபாகரன், புகழேந்தி ஆகியோர் கொண்ட அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஒரு பத்து நிமிடம் போக்குவரத்து காவலர் இல்லாமல் இருந்தால் அங்கு நிலைமை என்னவாகும் என்பது அனைவருக்கும் தெரியும். சமூகத்தில் போலீஸ் பாதுகாப்பு இல்லாவிட்டால் என்ன நடக்கும் என்பதும் தெரிந்தது தான்.
மக்களின் இயல்பு வாழ்க்கையை உறுதி செய்ய போலீஸாரின் சேவை அவசியமானது. போலீஸாரின் தேவை அவசியமாக இருக்கும்போது அவர்களை நன்றாக கவனிக்க வேண்டும். காவலர் பணி மகத்தான பணி. வேறு பணிகளுடன் காவலர் பணியை ஒப்பிட முடியாது.
போலீசாருடைய குறைகளைக் கேட்டு நிவர்த்தி செய்ய ஆணையம் அமைக்க வேண்டும். உளவியல் ஆலோசகர்கள்,சமூக ஆர்வலர்கள் உள்ளிட்டோரைக் கொண்ட ஆணையத்தை 3 மாதத்தில் அமைக்க வேண்டும்.
போலீசாருக்கு 8 மணி நேர வேலை என்ற அடிப்படையில் 3 ஷிஃப்ட் முறையை அமல்படுத்த வேண்டும். இதன்படி, 3 ஷிப்ட் அடிப்படையில் காவலர்கள் பணிபுரிய அனுமதிக்க வேண்டும். போலீசாருக்கு குறைந்தபட்சம் 10 % கூடுதல் ஊதியம் வழங்க அரசு பரிசீலிக்க வேண்டும். ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் ஆணையம் அமைக்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை ஆணையிட்டுள்ளது.
காவலர்களுக்கு ஆணையம் அமைக்க உத்தரவு
