புதுக்கோட்டையில் உள்ள தனியார் மண்டபத்தில் மூவார் நாட்டுக்கோட்டை செட்டியார்கள் அறப்பணி கழகத்தின் 50ம் ஆண்டு பொன் விழா நடைபெற்றது. இதில் கனிம வளத்துறை அமைச்சர் ரகுபதி, சட்டமன்ற உறுப்பினர் முத்துராஜா உள்ளிட்டோர் பங்கேற்று சிறப்பித்தனர்.

நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் ரகுபதி, தமிழ் கடவுள் முருகன் என்கின்ற காரணத்தாலே, தமிழ் கடவுள் முருகன் நமக்கு சொந்தமான கடவுள், அந்த உணர்வோடு இந்த நிகழ்வில் நின்று கொண்டிருக்கிறோம். தமிழ்நாட்டில் எந்த பெயரை சொன்னாலும் எடுபடாது என்கிற காரணத்தால் முருகன் பெயரைச் சொல்லிக் கொண்டு, இங்கே சிலர் வந்திருக்கிறார்கள்.
அவர்களும் யார் என்பது நாட்டுக்கு நன்றாக தெரியும், முருகன் என்பது தமிழ் கடவுள்,
அந்த தமிழ் கடவுளை தமிழர்கள் நன்றாக அறிவார்கள் உணர்வார்கள் ,
தமிழர்களின் ஆன்மீகத்துக்கு எடுத்துக்காட்டான கடவுள்தான் முருகன் எனவும் தெரிவித்தார். அந்த முருகன் பெயரால் மூவார் முருகன் அறக்கட்டளை என ஆரம்பித்து நற்பணிகள் பல செய்து வரும் நாட்டுக்கோட்டை நகரத்தார் சங்கத்தின் பொன்விழாவில் கலந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகின்றேன் என கூறினார். தனியார் நிகழ்வில் தமிழக கனிமவளத் துறை அமைச்சர் ரகுபதி தற்பொழுது தமிழகத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் முருகன் ஆன்மீக அரசியலைப் பேசியது பலருக்கு வியப்பை ஏற்படுத்தியது.