நற்றிணைப் பாடல் 156:
நீயே அடி அறிந்து ஒதுங்கா ஆர் இருள் வந்து எம்
கடியுடை வியல் நகர்க் காவல் நீவியும்
பேர் அன்பினையே பெருங் கல் நாட
யாமே நின்னும் நின் மலையும் பாடி பல் நாள்
சிறு தினை காக்குவம் சேறும் அதனால்
பகல் வந்தீமோ பல் படர் அகல
எருவை நீடிய பெரு வரைச் சிறுகுடி
அரியல் ஆர்ந்தவர் ஆயினும் பெரியர்
பாடு இமிழ் விடர் முகை முழங்க
ஆடு மழை இறுத்தது எம் கோடு உயர் குன்றே
பாடியவர்: கண்ணங் கொற்றனார்
திணை: குறிஞ்சி
பொருள்:
பெருமலைத் தலைவனே! காலடி வைக்குமிடங்கூடத் தெரியாத இருட்டில் வருகிறாய். என் வீட்டுக்கு இருக்கும் கட்டுக்காவலைக் கடந்து வருகிறாய். பெருமளவில் அன்பு கொண்டவன் நீ. நாங்கள் தினைப்புனம் காக்க வருவோம். அங்கே உன்னையும், உன் மலையையும் பாடிக்கொண்டு பல நாள் தினைப்புனம் காப்போம். அதனால், அங்கே பகல் பொழுதிலேயே வருக. பல துன்பங்கள் நீங்கும்.
மலைப் பாறையில் கழுகுகள் வாழும் சிறுகுடிதான் எங்கள் ஊர். ஊர் மக்கள் அரியல் (பழைய நெல்லஞ்சோறு) உண்பவர்கள் என்றாலும் பெருமனம் கொண்டவர்கள். இந்த மலையில் உள்ள வெடிப்புக் குகையில் இடி முழக்கத்துடன் மழை பொழிந்திருக்கிறது. மகிழலாம். தோழி தலைவனுக்குக் கூறுகிறாள்.