நற்றிணைப் பாடல் 157:
இருங் கண் ஞாலத்து ஈண்டு தொழில் உதவிப்
பெரும் பெயல் பொழிந்த வழி நாள் அமையத்து
பல் பொறி அரவின் செல் புறம் கடுப்ப
யாற்று அறல் நுணங்கிய நாட் பத வேனில்
இணர் துதை மாஅத்த புணர் குயில் விளித்தொறும்
நம்வயின் நினையும் நெஞ்சமொடு கைம்மிகக்
கேட்டொறும் கலுழுமால் பெரிதே காட்ட
குறும் பொறை அயல நெடுந் தாள் வேங்கை
அம் பூந் தாது உக்கன்ன
நுண் பல் தித்தி மாஅயோளே
பாடியவர்: இளவேட்டனார்
திணை: பாலை
பொருள்:
பெரிய கண்ணகன்ற உலகம். உலகில் நடைபெறும் தொழில்களுக்கெல்லாம் உதவுவது மழை. மழை பொழிந்த மறுநாள். ஆற்றிலே படிந்த மணல். பாம்பு உரித்த தோல் போல் அறல் அறலாக் படிந்த மணல். நுண் மணல். வேனில் கால நாள். இலையடர்ந்த மாமரம். அதில் இருந்துகொண்டு குயில் கூவிற்று. தன் துணையை அழைத்துக் கூவிற்று. சிறிய பாறை. அதன் அருகில் நீண்ட வேர்களைக் கொண்ட வேங்கைமரம். அதன் பூந்தாது கொட்டிக் கிடப்பது போல் நுண்ணிய பல புள்ளிகளைக் கொண்ட மேனி கொண்ட மாயோள்.