நற்றிணைப் பாடல் 154:
கானமும் கம்மென்றன்றே வானமும்
வரை கிழிப்பன்ன மை இருள் பரப்பி
பல் குரல் எழிலி பாடு ஓவாதே
மஞ்சு தவழ் இறும்பில் களிறு வலம் படுத்த
வெஞ் சின உழுவைப் பேழ் வாய் ஏற்றை
அஞ்சுதக உரறும் ஓசை கேளாது
துஞ்சுதியோ இல தூவிலாட்டி
பேர் அஞர் பொருத புகர் படு நெஞ்சம்
நீர் அடு நெருப்பின் தணிய இன்று அவர்
வாரார் ஆயினோ நன்றே சாரல்
விலங்கு மலை ஆர் ஆறு உள்ளுதொறும்
நிலம் பரந்து ஒழுகும் என் நிறை இல் நெஞ்சே
பாடியவர்: நல்லாவூர் கிழார்
திணை: குறிஞ்சி
பொருள்:
காடே ‘கம்’ என்று மழை மணம் கமழ்கின்றது. வானம் மலையைக் கிழிப்பது போல மின்னி ஓயாது முழங்குகிறது. யானையைக் கொன்ற வேங்கைப் புலி (உழுவை) மேகம் தவழும் மலைக்காட்டில் அச்சம் தரும்படி உருமுகிறது (உரறும்). தூயவளே (தூவிலாட்டி, தோழியைத் தலைவி அழைக்கும் சொல்) இதனைக் காது கொடுத்துக் கேளாமல் உறங்குகிறாயா? இதனைக் கேட்ட என் நெஞ்சம் பெரிதும் வருந்துகிறது. இந்தத் துன்பமானது, நீரைச் சூடேற்றும் நெருப்பு தணிவது போலத் தணியும்படி அவர் என்னிடம் வராவிட்டாலும் பரவாயில்லை. மலையில் தோன்றும் ஆறு நிலத்துக்கு ஓடிவிடுவது போல என்னிடம் நிற்காத என் நெஞ்சம் அவரிடம் ஓடிவிடுகிறது. இவ்வாறு தலைவி தன் தோழியிடம் கூறுகிறாள்.