நற்றிணைப் பாடல் 153:
குண கடல் முகந்து குடக்கு ஏர்பு இருளி
மண் திணி ஞாலம் விளங்க, கம்மியர்
செம்பு சொரி பானையின் மின்னி எவ் வாயும்
தன் தொழில் வாய்த்த இன் குரல் எழிலி
தென்புல மருங்கில் சென்று அற்றாங்கு
நெஞ்சம் அவர்வயின் சென்றென ஈண்டு ஒழிந்து
உண்டல் அளித்து என் உடம்பே விறல் போர்
வெஞ் சின வேந்தன் பகை அலைக் கலங்கி
வாழ்வோர் போகிய பேர் ஊர்ப்
பாழ் காத்திருந்த தனி மகன் போன்றே
பாடியவர்: தனிமகனார்
திணை: பாலை
பொருள்:
கீழைக்கடலில் நீரை முகந்துகொண்டு மேற்கு தோக்கிச் சென்ற மேகம் கம்மியன் செம்பை உருக்கிப் பானையில் கொட்டுவது போல மின்னி, மண்ணால் திணிக்கப்பட்டிருக்கும் உலகம் விளங்குவதற்காக தன் பொழிதல் தொழிலை ஆற்றிய பின்னர் வெற்று மேகமாகத் தெற்குப் பக்கம் செல்வது போல, நான் இங்கே வெறுமனே கிடக்கிறேன். ஆனால் என் நெஞ்சு மட்டும் அவரிடம் செல்கிறது. என் உடம்பு பாவம். இரங்கத்தக்கது. போர் வெற்றிக்காகச் சினம் கொண்டு தாக்கும் பகை மன்னனின் கீழ் வாழ விரும்பாமல் ஊர் மக்களே குடிபோன பின்னர், பாழ்பட்டிருக்கும் ஊரைக் காத்துக்கொண்டிருக்கும் தனிமகன் போலக் கிடக்கிறேன். தலைவி தன் தனிமையைப் பற்றி இவ்வாறு எண்ணிக் கலங்குகிறாள்.