நற்றிணைப் பாடல் 116:
தீமை கண்டோர் திறத்தும் பெரியோர்
தாம் அறிந்து உணர்க என்ப மாதோ
வழுவப் பிண்டம் நாப்பண் ஏமுற்று
இரு வெதிர் ஈன்ற வேல் தலைக் கொழு முளை
சூல் முதிர் மடப் பிடி நாள் மேயல் ஆரும்
மலை கெழு நாடன் கேண்மை பலவின்
மாச் சினை துறந்த கோள் முதிர் பெரும் பழம்
விடர் அளை வீழ்ந்து உக்காஅங்கு தொடர்பு அறச்
சேணும் சென்று உக்கன்றே அறியாது
ஏ கல் அடுக்கத்து இருள் முகை இருந்த
குறிஞ்சி நல் ஊர்ப் பெண்டிர்
இன்னும் ஓவார் என் திறத்து அலரே
பாடியவர்: கந்தரத்தனார்
திணை: குறிஞ்சி
பொருள்:
அவன் நட்பு மரத்திலிருந்து மலைச்சரிவில் விழுந்து உருண்டோடித் தொலைவில் கிடக்கும் பலாப்பழம் போன்றது என்கிறாள் காதலி. ஒருவரிடம் தீமை கண்டாலும் அதனை ஆராய்ந்த பின்னர்தான் முடிவுக்கு வரவேண்டும் என்று பெரியோர் கூறுவர். எவ்வளவுதான் சோற்றுப் பிண்டம் ஊட்டினாலும் சூலுற்றிருக்கும் பெண்யானை இரண்டு மூங்கில்களுக்கு இடையே கொழுத்து வளரும் மூங்கில் முளையை மேயவே விரும்பும். இப்படி யானை விரும்பும் மலையை உடையவன் என் நாடன். அவன் நட்பு எப்படிப்பட்டது தெரியுமா? கிளையில் இருந்த பலாப் பழம் மலை வெடிப்பில் விழுந்து கிடப்பது போன்றது அவன் நட்பு. பலாப் பழம் மலைப் பிளவில் உருண்டு சென்று தொலைவிடத்தில் கிடப்பது போன்றதும் ஆகும். பெரிய கற்கள் அடுக்கி வைத்த இருண்ட குகையில் வாழும் பெண்டிர் இன்னும் வாய் ஓயாமல் அலர் தூற்றுகின்றனர்.