நற்றிணைப் பாடல் 117:
பெருங் கடல் முழங்க கானல் மலர
இருங் கழி ஓதம் இல் இறந்து மலிர
வள் இதழ் நெய்தல் கூம்ப புள் உடன்
கமழ் பூம் பொதும்பர்க் கட்சி சேர
செல் சுடர் மழுங்கச் சிவந்து வாங்கு மண்டிலம்
கல் சேர்பு நண்ணிப் படர் அடைபு நடுங்க
புலம்பொடு வந்த புன்கண் மாலை
அன்னர் உன்னார் கழியின் பல் நாள்
வாழலென் வாழி தோழி என்கண்
பிணி பிறிதாகக் கூறுவர்
பழி பிறிதாகல் பண்புமார் அன்றே
பாடியவர்: குன்றியனார்
திணை: நெய்தல்
பொருள்:
தலைவி தோழியிடம் இவ்வாறு கூறுகிறாள்.
மாலை வேளை. கடல் முழக்கம் பெரிதாகிறது. கடற்கரை நிலமாகிய கானல் பூத்துக் குலுங்குகிறது. உப்பங்கழியில் எழும் அலை வீடு வரையில் வந்து மோதுகிறது. வளமான இதழ்களை உடைய நெய்தல் பூ கூம்புகிறது. சோலையில் உள்ள பறவைகள் கூட்டுக்குச் செல்கின்றன. சுடரும் வெயில் மழுங்குகிறது. ஞாயிறு மலையில் மறைகிறது. இலைகள் ஞாயிற்று ஒளி இல்லாமல் நடுங்குகின்றன. இப்படிப் புலம்பும்படி மாலைக்காலம் வருகிறது. அவர் இவற்றை நினைத்துப் பார்க்கவில்லை. (உன்னார்). இனி உப்பங்கழிக் கரையில் காத்துக்கொண்டு பல நாள் உயிர் வாழமாட்டேன். தோழி, இதைக் கேள். என்னைப் பிணித்துக்கொண்டிருக்கும் நோய் ஒருபுறம். எனக்கு வரும் பழி மற்றொருபுறம். பண்பு இப்படி ஆகிவிட்டது. என்ன செய்வேன்.