நற்றிணைப் பாடல் 99:
உள்ளுதொறும் நகுவேன் தோழி! வள்உகிர்
மாரிக் கொக்கின் கூரல் அன்ன
குண்டு நீர் ஆம்பல் தண் துறை ஊரன்
தேம் கமழ் ஐம்பால் பற்றி, என் வயின்
வான் கோல் எல் வளை வெளவிய பூசல்
சினவிய முகத்து, ”சினவாது சென்று, நின்
மனையோட்கு உரைப்பல்” என்றலின், முனை ஊர்ப்
பல் ஆ நெடு நிரை வில்லின் ஒய்யும்
தேர் வண் மலையன் முந்தை, பேர் இசைப்
புலம் புரி வயிரியர் நலம் புரி முழவின்
மண் ஆர் கண்ணின் அதிரும்,
நன்னர் ஆளன் நடுங்கு அஞர் நிலையே.
பாடியவர்: பரணர்
திணை: மருதம்
பொருள்:
பரத்தை சொல்கிறாள்.
அவன் என் கூந்தலையும் கையையும் பிடித்து இழுத்தான். உன் மனைவியிடம் சொல்லிவிடுவேன் என்றேன். அவன் நடுங்கிப் போனான். அதை நினைத்தால் எனக்குச் சிரிப்பு வருகிறது. தோழி! நினைக்கும்போதெல்லாம் சிரிப்பு வருகிறது. அவன் ஊரன். வளைந்த நகங்களை உடைய கொக்கு மழையில் நனைந்துகொண்டு குந்தியிருப்பது போல ஆழமான நீர்த்துறையில் ஆம்பல் மலர் பூத்துக்கொண்டிருக்கும் துறையை உடைய ஊரன். பூக்களின் தேன்-மணத்தோடு ஐந்து வகையாக ஓப்பனை செய்யப்பட்ட என் கூந்தலையும், வெண்ணிறச் சங்கு-வளையல் அணிந்திருக்கும் கையையும் பிடித்து இழுத்தான். அது எனக்கு விருப்பந்தான். அவன்மீது சினம் கொள்ளவில்லை. என்றாலும் சினம் கொண்டது போன்ற முகத்துடன் கத்தினேன். “உன் மனைவிடம் சொல்லிவிடுவேன்” என்று கத்தினேன். அதனைக் கேட்டதும் அவன் நடுநடுங்கிப் போனான். தேர்களைக் கொடையாக வழங்குபவன் வள்ளல் மலையன். (மலையமான் திருமுடிக் காரி)
வில்லும் கையுமாகச் சென்று ஆடுமாடுகளை அவன் கவர்ந்து வருவான். அப்போது அவன் புகழை வயிரியர் யாழிசையுடன் பாடுவர். அங்கு வயிரியர்க்கு நலம் புரியும் மலையனின் முரசு முழங்கும். அந்த முரசின் முகக் கண் அடி பட்டு நடுங்குவது போல அவன் துன்புற்று நடுநடுங்கினான்.