• Thu. Apr 18th, 2024

இலக்கியம்

Byவிஷா

Jan 12, 2023

நற்றிணைப் பாடல் 99:

”நீர் அற வறந்த நிரம்பா நீள்இடை,
துகில் விரித்தன்ன வெயில் அவிர் உருப்பின்,
அஞ்சுவரப் பனிக்கும் வெஞ் சுரம் இறந்தோர்
தாம் வரத் தெளித்த பருவம் காண்வர
இதுவோ?” என்றிசின்-மடந்தை! மதி இன்று,
மறந்து கடல் முகந்த கமஞ் சூல் மா மழை
பொறுத்தல் செல்லாது இறுத்த வண் பெயல்
கார் என்று அயர்ந்த உள்ளமொடு, தேர்வு இல
பிடவமும், கொன்றையும் கோடலும்-
மடவ ஆகலின், மலர்ந்தன பலவே.

பாடியவர்: இளந்திரையனார்
திணை: முல்லை

பொருள்:
நீரே இல்லாமல் வறண்டுகிடக்கும் நீண்ட இடைவெளி. அங்கு வெள்ளைத் துணியை விரித்தது போலக் கொளுத்தும் வெயில். இப்படி அச்சம் தரும் காட்டு வழியில் அவர் பொருள் தேடச் சென்றிருக்கிறார். அவர் குளுமையாக வர வானம் நீரைத் தெளித்திருக்கும் பருவமோ இது?
அறியா மடந்தைப் பெண்ணே! அந்த மழை மேகத்துக்கு அறிவே இல்லை. மறந்துபோய்க் கடலில் நீரை முகந்துகொண்டது. மேலே செல்லும்போது நீர்க்கருவைத் தன் வயிற்றில் தாங்க முடியவில்லை. வளம் தரும் மழையாகப் பொழிகிறது. இதனைக் கார் காலம் என்று எண்ணிக் கொண்டாடிக்கொண்டு பிடவம், கொன்றை, கோடல் ஆகிய மலர்கள் மலர்கின்றன. அவை அறியா மடமை கொண்டவை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *