நற்றிணைப் பாடல் 174:
கற்றை ஈந்தின் முற்றுக் குலை அன்ன
ஆள் இல் அத்தத் தாள் அம் போந்தைக்
கோளுடை நெடுஞ் சினை ஆண் குரல் விளிப்பின்
புலி எதிர் வழங்கும் வளி வழங்கு ஆர் இடைச்
சென்ற காதலர் வந்து இனிது முயங்கி
பிரியாது ஒரு வழி உறையினும் பெரிது அழிந்து
உயங்கினை மடந்தை என்றி தோழி
அற்றும் ஆகும் அஃது அறியாதோர்க்கே
வீழாக் கொள்கை வீழ்ந்த கொண்டி
மல்லல் மார்பு மடுத்தனன்
புல்லு மற்று எவனோ அன்பு இலங்கடையே
பாடியவர்: ஆசிரியர் பெயர் இடம் பெறவில்லை
திணை: பாலை
பொருள்:
ஈந்து கற்றைக் கற்றையாகக் குலை தள்ளிக் காய்க்கும். அது போலப் பனைமரம் காய்த்திருக்கும். ஆள் இல்லாத பாதையில் காய்த்திருக்கும். அந்தப் பனைமரத்தில் இருந்துகொண்டு ஆண்டலைப் புள் குரல் கொடுத்தால் புலி எதிர்முழக்கம் செய்யும். அந்த வழியில் சென்ற காதலர் திரும்பி வந்து உன்னைத் தழுவுகிறார். பிரிந்து செல்லாமல் உன்னிடத்திலேயே இருக்கிறார். அப்படி இருக்கும்போது இன்னும் நீ ஏன் வருந்தி உடல் சோர்வுற்றிருக்கிறாய், என்று தோழி தலைவியை வினவுகிறாள். தலைவி தோழிக்கு விளக்குகிறாள். தோழி, உண்மை அறியாதவர்களுக்கு அது புலப்படாது. முன்பு போல் மீண்டும் செல்வான் போல் இருக்கிறதே! (அற்றும் ஆகும்) நான் கிடைத்துவிட்டேன் என்று (வீழ்ந்த கொண்டி) விருப்பம் இல்லாத உள்ளத்தோடு (வீழாக் கொள்கை) வளமான என் மார்பினை அணைத்துத் தின்கிறான். அன்பு இல்லாதபோது எதற்காக அணைக்கிறான்?