• Thu. Apr 25th, 2024

பரவாயில்லை இருக்கட்டும்.. தேசியக்கொடியை வாங்க மறுத்த பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா..

Byகாயத்ரி

Aug 29, 2022

நேற்று நடந்த ஆசியக்கோப்பை போட்டியில் இந்தியா வெற்றி பெற்ற நிலையில் தேசிய கொடியை வாங்க பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா மறுத்த வீடியோ வைரலாகி வருகிறது.

ஆசியக்கோப்பை டி20 போட்டிகள் அரபு அமீரகத்தில் தொடங்கி நடந்து வரும் நிலையில் நேற்றைய போட்டியில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதிக் கொண்டன. இதில் டாஸ் வென்ற இந்தியா பவுலிங் தேர்ந்தெடுத்த நிலையில் பாகிஸ்தான் அணி பேட்டிங் செய்தது. பாகிஸ்தான் அணியை 20 ஓவர்கள் முடியும் முன்னதாக அனைத்து விக்கெட்டுகளையும் காலி செய்த இந்திய அணி 147 ரன்களுக்குள் பாகிஸ்தானை ஆட்டமிழக்க செய்தது. பின்னர் பேட்டிங் செய்த இந்திய அணி 19.4 ஓவரில் 5 விக்கெட்டுகளை இழந்து 148 ரன்களை குவித்து வெற்றிப்பெற்றது. ஆட்ட நாயகன் விருதை ஹர்திக் பாண்ட்யா வென்றார்.

பாகிஸ்தான் அணியை இந்திய அணி வென்றதை மைதானத்தில் இருந்த பலரும் உற்சாகமாக கொண்டாடினர். பலர் இந்திய கொடியை தங்கள் உடம்பில் கட்டிக் கொண்டு ஆடினர். இந்தியாவின் வெற்றியை தொடர்ந்து ஒருவர் இந்திய தேசியக் கொடியை கொண்டு வந்து பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷாவிடம் கொடுத்த போது அவர் அதை வேண்டாம் என மறுத்து கை மட்டும் தட்டினார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ள நிலையில் , ஜெய்ஷா கொடியை வாங்க மறுத்தது ஏன் என பலரும் பல விதமாக கருத்துகளை தெரிவித்து வருவதும், கொடியை வாங்க மறுத்தது குறித்து விமர்சித்து வருவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *