விஜய் நடிப்பில் பீஸ்ட் படத்தை இயக்கி முடித்துள்ளார், இயக்குனர் நெல்சன். இந்தப் படத்தின் பாடல்கள், ட்ரெயிலர் மற்றும் தீம் பாடல் உள்ளிட்டவை ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளன. பீஸ்ட் படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது. இதையடுத்து மீண்டும் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சூப்பர்ஸ்டார் ரஜினியை இயக்க உள்ளார் நெல்சன். இந்தப் படத்திற்கு தற்போது தலைவர் 169 என்று பெயரிடப்பட்டுள்ளது. பீஸ்ட் ரிலீசுக்கு பிறகு இந்தப் படத்தில் நெல்சன் கவனம் செலுத்துவார் என்று கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில் படத்தின் சூட்டிங், ஜூலை மாதத்தில் துவங்கும் என்று நெல்சன் சொல்லியிருந்தார். ஆனால் படத்திற்கு கொஞ்சம் காலஅவகாசம் தேவைப்படுவதால் படம் ஆகஸ்ட் மாதத்தில் சூட்டிங்கை ஆரம்பிக்கும் என்று கூறப்படுகிறது. வழக்கமாக ஒரு கதையை உருவாக்க நெல்சனுக்கு 3 மாத அவகாசம் தேவைப்படுமாம். படத்தில் ஐஸ்வர்யா ராயை ரஜினிக்கு ஜோடியாக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறதாம். பிரியங்கா மோகன் ரஜினியின் மகளாக நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. சிவகார்த்திகேயனும் முக்கியமான கேரக்டரில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கிடையில் தனது வழக்கமான செக்கப்பிற்காக ரஜினியும் அமெரிக்க பயணத்தை திட்டமிட்டுள்ளார்.