• Wed. Apr 17th, 2024

போலீசாரால் கொடூரமாகத் தாக்கப்பட்ட சட்டக்கல்லூரி மாணவர்.. உடனடியாகப் பாய்ந்த நடவடிக்கை..!

Byவிஷா

Jan 19, 2022

சென்னை, தரமணியில் சட்டக்கல்லூரி மாணவர் தாக்கப்பட்ட விவகாரத்தில் தலைமைக் காவலர் பூமிநாதன், காவலர் உத்திரகுமாரன் ஆகிய இருவரையும் இடைநீக்கம் செய்து இணை ஆணையர் ராஜேஸ்வரி உத்தரவிட்டுள்ளார்.
சென்னை வியாசர்பாடி புதுநகரை சேர்ந்த அப்துல் ரஹீம் என்பவர் தரமணியில் உள்ள சட்டப்பல்கலைக்கழகத்தில் 5 ஆம் ஆண்டு படித்து வருகிறார். கல்லூரியில் படித்துகொண்டே பகுதி நேர வேலை பார்த்து வரும் அவர், கடந்த 15 ஆம் தேதி இரவு 11.30 மணியளவில் பணி முடிந்து வீடு திரும்பிக்கொண்டிருந்தார். அப்போது, அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அவரை தடுத்து நிறுத்தியுள்ளனர். முகக் கவசம் அணியாமல் சென்றதற்காக அபராதம் கட்டுமாறு ரஹீமிடம் போலீசார் கூறியுள்ளனர். அதற்கு ரஹீம் தான் முகக்கவசம் அணிந்து வந்ததால் அபராதம் கட்ட முடியாது என்று கூறியுள்ளார்.
இருதரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து காவலரை தாக்க முயன்றதாக கூறி ரஹீமை காவல்நிலையத்திற்கு போலீசார் கைது செய்து அழைத்து சென்றனர். காவல்நிலையத்தில் போலீசார் ரஹீமை அடித்து தாக்கியதுடன் அவரது உடைகளை கலைந்து நிர்வாணப்படுத்தியதாகவும் முகத்தில் சிறுநீர் கழித்ததாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பாக கொடுங்கையூர் காவல் நிலையத்தில் அப்துல் ரஹீம் அளித்துள்ள புகார் மனுவில், சம்பவத்தின் போது தான் முகக்கவசம் அணிந்து வந்ததாகவும் எனினும் அபராதம் கட்ட போலீசார் வற்புறுத்தியதாகவும் தனது வேலை அடையாள அட்டையை காண்பித்தும் விடவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், தன்னை நிர்வாணப்படுத்தி காவல்துறையினர் தாக்குதல் நடத்தியதாக குறிப்பிட்டுள்ள அவர், இரவு முழுவதும் காவல் நிலையத்தில் பூட்ஸ் காலால் மார்பில் எட்டி உதைத்து போலீசார் காயப்படுத்தினர். பீரோவில் தாக்கியதில் கண்ணில் காயம் ஏற்பட்டு தையல் போடப்பட்டுள்ளது. மேலும் போலீசார் சாப்பாடு வாங்கி கொடுத்து சாப்பிட விடாமல் தாக்கினர். இரவு 1 மணியில் இருந்து காலை 11 மணிவரை அடித்து உதைத்தனர் என்றும் தனது முகத்தில் சிறுநீர் கழித்தனர் என்றும் தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்தனர். இந்த நிலையில் சட்டக்கல்லூரி மாணவர் தாக்கப்பட்ட விவகாரத்தில் 2 போலீசார் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். தலைமைக் காவலர் பூமிநாதன், காவலர் உத்திரகுமாரன் ஆகிய இருவரையும் இடைநீக்கம் செய்து இணை ஆணையர் ராஜேஸ்வரி உத்தரவிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *