
காரைக்குடி அருகே வாகன சோதனையில் ஸ்டிக்கர் ஒட்டி வந்த 2 கார்களில் கொண்டு வரப்பட்ட 5 கோடி ரூபாயை போலீசார் பறிமுதல் செய்தனர்.
சிவகங்கை மாவட்டம் சிறுவயல் பகுதிகளில் வாகன சோதனையில் போலீசார் ஈடுபட்டிருந்தனர். அப்போது வழக்கறிஞர் ஸ்டிக்கர் ஒட்டி வந்த இரண்டு கார்களை நிறுத்த முயன்றனர். ஆனால், கார்கள் நிற்காமல் வேகமாக சென்றதை அடுத்து, விரட்டிச் சென்ற போலீசார் குன்றக்குடியில் வைத்து மடக்கிப் பிடித்தனர்.
மேலும், காரில் சோதனையிட்டபோது 5 கோடி ரூபாய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனையடுத்து, பணம் மற்றும் கார்களை பறிமுதல் செய்த போலீசார், கார்களில் வந்த 5 பேரிடம் விசாரணை மேற்கொண்டனர். கைப்பற்றப்பட்ட பணம், வருமான வரித்துறை யினரிடம் ஒப்படைக்கப்பட்டது.
இந்தப் பணம் எங்கிருந்து கொண்டு வரப்பட்டது என்பது குறித்து போலீசாரும் வருமான வரித்துறையினரும் விசாரித்து வருகின்றனர். விசாரணைக்கு பிறகு அடுத்தக் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
