• Fri. Mar 29th, 2024

லக்கிம்பூர் விவகாரம்.. 2-வது நாளாக முடங்கியது நாடாளுமன்றம்

Byமதி

Dec 16, 2021

லக்கிம்பூர் கெரியில் விவசாயிகள் போராட்டத்தின்போது நடைபெற்ற சம்பவம் திட்டமிட்டு அரங்கேற்றப்பட்ட நிகழ்வு என சிறப்பு விசாரணைக்குழுவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து இன்றும் எதிர்கட்சிகளின் அமலியால் 2-வது நாளாக முடங்கியது நாடாளுமன்றம்.

இன்று காலை மக்களவை கூடியதும், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உடனடியாக ‘அஜய் மிஸ்ரா ராஜினாமா செய்ய வேண்டும், அப்படி அவர் செய்யாவிட்டால் பிரதமர் நரேந்திர மோடி அவரை அமைச்சரவை விட்டு நீக்க வேண்டும்’ எனவும் வலியுறுத்தினார். சபாநாயகர் ஓம் பிர்லா இதுதொடர்பாக பேச யாருக்கும் அனுமதி அளிக்கவில்லை என மறுத்த போதிலும், ராகுல் காந்தி தொடர்ந்து இதுகுறித்து பேசினார்.

“லக்கிம்பூர் கேரி விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதம் தேவை. ‘கிரிமினல்’ அமைச்சர் ஏன் மத்திய அமைச்சரவையில் நீடிக்கிறார்?”
அஜய் மிஸ்ரா அமைச்சராக நீடித்தால் நியாயமான விசாரணை நடைபெறாது எனவும் தனது மகன் ஆஷிஷ் மிஸ்ராவை காப்பாற்ற முயற்சி செய்வதாகவும், காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள் வலியுறுத்தினார்கள். ராகுல்காந்தி பேசும்போது அவர்கள் தங்களுடைய இருக்கைகளில் எழுந்து நின்று முழக்கம் எழுப்பினர்கள்.

முழக்கங்கள் தொடர்ந்ததால் சபாநாயகர் ஓம் பிர்லா, மக்களவையை 2 மணி வரை ஒத்தி வைத்தார். அதேபோல மாநிலங்களவையிலும் தொடர் முழக்கங்கள் மற்றும் அமளி என்கிற நிலை நீடித்ததால், அவைத்தலைவர் வெங்கையா நாயுடு மாநிலங்களவை 2 மணி வரை ஒத்திவைத்தார்.

மதியம் 2 மணிக்கு மக்களவை மற்றும் மாநிலங்களவை கூடியபோது, மீண்டும் எதிர்க்கட்சிகள் தொடர் முழக்கம் எழுப்பின. அமளி முடிவுக்கு வராத காரணத்தால், இரண்டு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டன.

இதைத்தொடர்ந்து ஆளும் கூட்டணி சார்பில், “லக்கிம்பூர் கேரி விவகாரம் தற்போது நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால் இதுகுறித்து விவாதிக்க முடியாது” எனவும், பாரதிய ஜனதா கட்சித் தலைவர்கள் “அஜய் மிஸ்ரா ராஜினாமா செய்ய வாய்ப்பு இல்லை. நீதிமன்றம் இந்த வழக்கில் என்ன முடிவு எடுக்கிறது என்பதன் அடிப்படையிலேயே நடவடிக்கை எடுப்பது சரியாக இருக்கும்” என வலியுறுத்தி வருகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *