மதுரையில் தென் மண்டல காவல்துறையினருக்கான உங்கள் துறையில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் குறைதீர் முகாம் டிஜிபி தலைமையில் நடைபெற்றது. 700க்கும் மேற்பட்ட காவலர்களிடம் கோரிக்கை மனு பெறப்பட்டு நடவடிக்கை.
உங்கள் துறையில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் தென் மண்டலத்திற்கு உட்பட்ட மதுரை, தேனி , திண்டுக்கல், விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை, தூத்துக்குடி, நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய 10 மாவட்டங்களை சேர்ந்த காவலர்கள் மற்றும் சிறப்பு காவலர்களுக்கான குறைதீர் முகாம் தமிழக காவல்துறை இயக்குனர் சைலேந்திரபாபு தலைமையில் மதுரை ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்றது.
இதில் 700க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பணியிட மாறுதல், மருத்துவ காப்பீடு, துறை ரீதியான பிரச்சனைகள் ஒழுங்கு நடவடிக்கை மற்றும் நிலுவைத் தொகை உள்ளிட்ட தங்களது கோரிக்கைகளை மனுக்களாக வழங்கினா். மனுக்கள் மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுப்பதாக டிஜிபி உறுதி அளித்தார். இதில் தென்மண்டல ஐஜி அன்பு, டிஐஜிகள் மற்றும் காவல்துறை கண்காணிப்பாளர்கள், மாநகர காவல் ஆணையர்கள் பங்கேற்றனர். முன்னதாக மதுரை வந்த டிஜிபிக்கு மதுரை மாநகர காவல்துறை சார்பில் காவல்துறை வரவேற்பு அளிக்கப்பட்டது.