• Sat. Apr 20th, 2024

நீர்நிலைகளில் ஆக்கிரமிப்பை அனுமதித்தால் சஸ்பெண்ட் – நீதிபதிகள் எச்சரிக்கை!

Byமதி

Dec 16, 2021

நீர்நிலைகளில் ஆக்கிரமிப்புகள் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது அதிகாரிகளின் கடமை, மீண்டும் ஆக்கிரமிப்புகள் முளைத்தால் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை சஸ்பெண்ட் உள்ளிட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என உயர்நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

தமிழகம் முழுவதும் பல்வேறு நீர்நிலைகள் ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரிய வழக்குகள், பொறுப்பு தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, தலைமைச் செயலாளர் அறிக்கையின் அடிப்படையில், தமிழகம் முழுவதும் உள்ள நீர் நிலைகள் அடையாளம் காணப்பட்டுள்ளதால், அவற்றில் உள்ள ஆக்கிரமிப்புகளை குறிப்பிட்ட கால அவகாசத்துக்குள் அகற்ற வேண்டும் என்றும், இல்லாவிட்டால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆஜராக உத்தரவிட நேரிடும் எனவும் எச்சரித்த நீதிபதிகள், சர்வே எண் உள்ளிட்ட அனைத்து விவரங்களும் அதிகாரிகளுக்கு தெரியும் என்பதால் நீர்நிலைகளை ஆக்கிரமிப்புகள் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது அதிகாரிகளின் கடமை என தெரிவித்தனர்.

ஆக்கிரமிப்பு அகற்றப்பட்ட பின்னும் மீண்டும் முளைத்தால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது சஸ்பெண்ட் உள்ளிட்ட ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் எச்சரித்தனர்.

மேலும், இணையதளத்தில் சர்வே எண்ணை குறிப்பிட்டால் மட்டுமே நீர்நிலைகளின் விவரங்கள் தெரிய வருகிறது என்பதால், நீர்நிலைகள் குறித்த அனைத்து விவரங்களையும் பதிவேற்றம் செய்ய வேண்டும் எனக் கேட்டுக் கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *