இந்திய தேர்தல் ஆணைய உத்தரவுப்படி கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளுக்கான சிறப்பு சுருக்கமுறை திருத்த இறுதி வரைவு வாக்காளர் பட்டியலை தேர்தல் அலுவலரும், மாவட்ட கலெக்டருமான ஜெயசந்திரபானுரெட்டி அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் நேற்று வெளியிட்டார்.
அப்போது கலெக்டர் பேசியதாவது:- கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் 1.1.2023-ம் தேதியை தகுதி ஏற்பு நாளாக கொண்டு வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த பணிகள் முடிக்கப்பட்டு நேற்று இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது.
இந்த பட்டியலின்படி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஆண் வாக்காளர்கள் 8 லட்சத்து 2 ஆயிரத்து 803 பேரும், பெண் வாக்காளர்கள் 7 லட்சத்து 95 ஆயிரத்து 712 பேரும், 3-ம் பாலினத்தினர் 291 பேரும் என மொத்தம் 15 லட்சத்து 98 ஆயிரத்து 806 வாக்காளர்கள் உள்ளனர்.
சிறப்பு சுருக்க முறை திருத்தத்தின் படி 27 ஆயிரத்து 818 வாக்காளர்கள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளனர். 35 ஆயிரத்து 168 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். இறுதி வாக்காளர் பட்டியல் பொதுமக்களின் பார்வைக்காக மாவட்ட கலெக்டர் அலுவலகம், வாக்காளர் பதிவு அலுவலர் மற்றும் கிருஷ்ணகிரி, ஓசூர் உதவி கலெக்டர் அலுவலகங்கள், ஓசூர் மாநகராட்சி, கிருஷ்ணகிரி நகராட்சி அலுவலகம் மற்றும் 1,880 வாக்குச்சாவடிகளிலும் பொதுமக்களின் பார்வைக்காக இறுதி வாக்காளர் பட்டியல் வைக்கப்பட்டுள்ளது. இந்த அலுவலகங்களில் வாக்காளர்கள் தங்களது பதிவுகள் மற்றும் திருத்தங்களை சரிபார்த்து கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறினார்.