முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதாவுக்கு சொந்தமான கோடநாடு எஸ்டேட்டில் நடைபெற்ற கொலை மற்றும் கொள்ளை வழக்கில் பல்வேறு அதிரடி திருப்பங்கள் ஏற்பட்டு வரும் நிலையில், வழக்கு இன்று மீண்டும் உதகை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. இதனால் எடப்பாடி தரப்பு பதற்றத்துடன் காணப்படுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதாவின் மறைவிற்குப் பிறகு, கடந்த 2017-ம் ஆண்டு கோத்தகிரி அடுத்த கொடநாடு பங்களாவில், நிகழ்ந்த கொலை மற்றும் கொள்ளை தொடர்பாக, சயான், வாளையார் மனோஜ் உள்பட 10 பேர் கைது செய்யப்பட்டனர். மனோஜை தவிர மற்ற அனைவரும் ஜாமீனில் வெளியில் உள்ள நிலையில், தமிழ்நாட்டில் ஆட்சி மாறியதும் காட்சிகளும் மாறின. இந்த வழக்கின் மறுவிசாரணை நடத்த திமுக அரசு எடுத்த நடவடிக்கையின் காரணமாக, கோடநாடு வழக்கு சூடுபிடிக்க தொடங்கியது. இதனால் முன்னாள் முதல்வர், எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பதற்றத்துடன் இருப்பதாகத் தெரிய வருகிறது. மறுவிசாரணைக்கு தடை கோரி நீதிமன்றத்தை தட்டியும், நீதிமன்றம் கதவை சாத்தியதால், வழக்கு விசாரணை வேகமெடுத்துள்ளது.

மேற்கு மண்டல ஐ.ஜி. சுதாகர், ஊட்டியிலேயே முகாமிட்டு குற்றம் சாட்டப்பட்ட நபர்களிடம் நேரில் விசாரணை மேற்கொண்டார். எஸ்டேட்டில் வேலை பார்த்த நபர்கள் மற்றும் அவர்களது வீடுகளுக்கு சென்று விசாரித்தார். இதுவரை நடத்தப்பட்ட விசாரணைகளை வைத்து சில ஆதாரங்களை திரட்டியுள்ளதாக கூறப்படுகிறது. போலீசாருக்கு வழங்கிய கால அவகாசம் முடிவடைந்த நிலையில், ஊட்டி மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் இன்று கொடநாடு வழக்கு விசாரணைக்கு வருகிறது.
இன்றைய விசாரணைக்கு வழக்கில் தொடர்புடைய 10 பேரில் நிபந்தனை ஜாமினில் உள்ள சயான், சிறையில் உள்ள வாளையாறு மனோஜ் உள்பட அனைவரும் இன்று ஆஜராகின்றனர்.
இதுமட்டுமின்றி, இந்த வழக்கின் மறுவிசாரணை தொடர்பாக தனிப்படையினர் கடந்த ஒரு மாதமாக மேற்கொண்டு வரும் விசாரணை பற்றிய அறிக்கையை இன்று தாக்கல் செய்ய வாய்ப்புள்ளது. விசாரணையை முழுவதுமாக முடிக்க மேலும் ஒரு மாத காலம் அவகாசம் கேட்டு நீதிமன்றத்தில் மனு செய்யவும் வாய்ப்புள்ளது. கோடநாடு கம்ப்யூட்டர் ஆபரேட்டர் தினேஷ் தற்கொலை வழக்கிலும் மறுவிசாரணை நடத்தி வருவது பற்றியும் தெரிவிக்க வாய்ப்புள்ளது. இதனால் கோடநாடு வழக்கு மேலும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கின்றது.