தஞ்சாவூர் அருகே மாணவன் ஒருவர், வீடு கட்ட இலவச பட்டா மற்றும் வீடு கட்டுவதற்கான உதவி கேட்டு கலெக்டரின் வாட்ஸ்அப் நம்பருக்கு மனு அனுப்பியிருந்தார். அதன் மீது உடனடியாகச் செயலாற்றி, நடவடிக்கையை எடுத்து அந்த மாணவரை நெகிழ வைத்துள்ளார் கலெக்டர்.

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள கீழப்பொன்னாப்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் தனிகிளாஸ், செல்வமணி தம்பதியினர். இவர்கள் விவசாயக் கூலி வேலை செய்து வருகின்றனர். இவர்களுக்கு இரண்டு பெண், இரண்டு ஆண் என நான்கு பிள்ளைகள். கடைசி மகனான சதீஸ்குமார், அரசுக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில், தங்கள் குடும்பத்துக்கு இருக்க இடமும், வீடு கட்ட உதவியும் கேட்டு தஞ்சாவூர் கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவரின் வாட்ஸ்அப் எண்ணுக்கு மனு ஒன்றை அனுப்பியிருந்தார் சதீஸ்குமார்.

அதில், “என் அம்மா பிறந்த ஊரான ஒக்கநாடு கீழையூரில் உறவினர் ஒருவருடைய வீட்டில் வாடகைக்குக் குடியிருக்கிறோம். நான்கு பிள்ளைகளை வைத்துக்கொண்டு, சொந்தமாகக் குடிசை கூட இல்லாமல் சொல்லில் அடங்காத அவமானங்களைச் சந்திக்கிறோம். நான்கு பிள்ளைகளுடன் என் பெற்றோர் படும் துயரம் கண்களில் கண்ணீரை வர வைக்கிறது சார். நீங்கள் எங்களுக்கு பட்டா ஏற்பாடு செய்து கொடுத்து, வீடு கட்டித்தர ஏற்பாடு செய்து கொடுக்க முடியுமா? இதை நான் இலவசமாகக் கேட்கவில்லை. இன்று எனக்கு இது நடந்தால், நாளை நான் படித்து ஆளாகி நிச்சயம் எங்களைப் போன்ற ஒருவருக்காவது வீடு கட்டித் தருவேன்” என்று குறிப்பிட்டிருந்தார்.
சதீஸ்குமார் குறிப்பிட்டிருந்த அந்தக் கடைசி வரி கலெக்டரை நெகிழ வைத்தது. உடனே சதீஸ்குமாரை நேரில் அழைத்து விசாரித்து, தாசில்தார் உள்ளிட்டவர்களை அனுப்பி அவர்களது நிலையை அறிந்து கொண்டார். தற்போது சதீஸ்குமார் குடும்பத்துக்கு பட்டா கிடைக்க உள்ளது. அடுத்து, வீடு கட்டிக் கொடுப்பதற்கான நடவடிக்கையும் எடுக்கப்படுகிறது.
ஒரு ஏழைக் குடும்பத்தின் பல வருடக் கனவு முடிவுக்கு வந்துவிட்டது. கலெக்டரின் செயலால் அந்த ஏழை விவசாயக் குடும்பமே நெகிழ்ந்திருக்கிறது.