

கன்னியாகுமரியில் நடைபெற்ற சர்வதேச யோகாசன பயிற்சி மற்றும் மாநாட்டில் கேரள மாநில ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் ஆர்லேக்கர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
கன்னியாகுமரி விவேகானந்த கேந்திரம் நடத்தும் வருடாந்திர யோக சாஸ்திர சங்கமம் நிகழ்ச்சியின் எட்டாவது ஆண்டு துவக்க விழா இன்று நடைபெற்றது. கேரளா ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் ஆர்லேக்கர் சிறப்புரை ஆற்றினார். விவேகானந்தர் கேந்திரத்தின் தலைவர் பாலகிருஷ்ணன் இந்நிகழ்ச்சிக்கு முன்னிலை வகித்தார்.
நிகழ்ச்சியின் போது ‘ ‘யோக பயிற்சி- ஒரு கையேடு’ என்ற புத்தகத்தையும் விழா மலரினையும் ஆளுநர் வெளியிட கோட்டயம் மகாத்மா காந்தி பல்கலைக்கழகத்தின் யோகா மற்றும் நேச்சுரோபதி துறையின் இயக்குனரான ஹரி லட்சுமீந்திர குமார் மற்றும் கோட்டயம் மகாத்மா காந்தி பல்கலைக்கழகத்தின் பேராசிரியரான பத்மநாபன் ஆகியோர் முதல் பிரதியினை பெற்றுக்கொண்டனர்.

பீகார் ஸ்கூல் ஆப் யோகா ஆசிரமத்தின் தலைவர் பூஜ்ய சுவாமி நிரஞ்சனானந்த சரஸ்வதி இன்று இந்நிகழ்ச்சியில் பங்கேற்று ஆசி வழங்க உள்ளார். நிகழ்ச்சியில் சிறப்புரையாற்றிய கேரள ஆளுநர்,
“நம்முடைய முன்னோர்கள் நமக்கு அளித்த ஞானக் கருவூலங்களான யோக தத்துவங்களை இன்றைய தலைமுறையினருக்கு புரியும் வகையிலும் அவர்கள் விரும்பும் வகையிலும் கொண்டு செல்ல வேண்டியது நம் அனைவரின் கடமை. அனைத்து பல்கலைக்கழகங்களும் இதனை கவனத்தில் கொள்ள வேண்டும்” என்று கூறினார்.
இந்த மூன்று நாள் கருத்தரங்கத்தை கன்னியாகுமரி விவேகானந்த கேந்திரம், கோட்டயம் மகாத்மா காந்தி பல்கலைக்கழகம் மற்றும் இமாச்சலப் பிரதேச மத்திய பல்கலைக்கழகம் ஆகிய மூன்று நிறுவனங்களும் இணைந்து நடத்துகின்றன. இந்த நிகழ்வில். பல்வேறு நாட்டின் அனைத்து மாநிலங்களில் இருந்தும் மற்றும் கென்யா ஜப்பான் இங்கிலாந்து அமெரிக்கா ஆகிய நாடுகளில் இருந்தும் 750 பேர் இந்த கருத்தரங்கில் பங்கேற்கின்றனர்.


