

வாரணாசியில் காசி தமிழ்ச்சங்கமம் 3,0 நிகழ்ச்சி நாளை(பிப்ரவரி 15) கோலாகலமாக தொடங்குகிறது.
உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள காசி விஸ்வநாதர் கோயிலுக்கும் தமிழ்நாட்டுக்கும் இடையே ஆன்மிகம், கலாச்சார ரீதியாகப் பழங்காலம் முதலே தொடர்பு உள்ளது. அந்த தொடர்பை வலுப்படுத்த கடந்த 2022-ம் ஆண்டு காசி தமிழ்ச் சங்கமம் நிழ்ச்சியை பிரதமர் மோடி தொடங்கினார். கடந்த 2023 டிசம்பரில் 2-வது சங்கமம் நடைபெற்றது. இந்த 2 நிகழ்ச்சிகளுக்கும் தமிழ்நாட்டைச் சேர்ந்த பலர் மத்திய அரசின் செலவில் அழைத்துச் செல்லப்பட்டனர்.
இதன் தொடர்ச்சியாக காசி தமிழ்ச் சங்கமம் 3.0 (கேடிஎஸ் 3.0) வாரணாசியில் நாளை தொடங்கு கிறது. இதை உத்தரப் பிரதேச மாநில அரசு ஆதரவுடன் மத்திய கல்வித்துறை அமைச்சகம் நடத்துகிறது. தொடக்க நிகழ்வில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், இணை அமைச்சர் முருகன் மற்றும் உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.
இந்த நிகழ்ச்சி வரும் 25-ம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் தமிழகம் மற்றும் தேசிய அளவில் பல முக்கிய பிரிவினர் கலந்து கொண்டு அன்றாடம் உரை நிகழ்த்த உள்ளனர். பிப்ரவரி 25-ம் தேதி நடைபெறும் நிறைவு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ்நாட்டில் இருந்து ரயில்கள் மூலம் இதற்கு வருகை தருபவர்களை மகா கும்பமேளாவில் ஒரு இரவு தங்க வைக்கவும், அயோத்தி ராமர் கோயிலுக்கு அழைத்து செல்லவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

