சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தாலுகா நெற்குப்பை பேரூராட்சியில் உள்ள பெரிய கண்மாய் கடந்த சில வாரங்களாக பெய்த கன மழையினால் பல்வேறு பகுதிகளிலிருந்து வரத்துக் கால்வாய் மூலம் வந்த அதிகப்படியான தண்ணீரினால் கண்மாய் முழு கொள்ளளவை எட்டியது.

இதனால் மகிழ்ச்சி அடைந்த இப்பகுதி விவசாயிகள் முன்னோர்களின் பாரம்பரிய முறையில் கண்மாய் நிரம்பியதை கொண்டாடும் பொருட்டு மேளதாளம் முழங்க பெண்கள் குலவையிட்டு வழிபாடு நடத்தி கண்மாயின் மையப்பகுதியில் உள்ள நாட்டுகல்லுக்கு இளைஞர்கள் நீந்தி சென்று பொட்டு பானை கவிழ்த்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தி கொண்டாடினர்.
இதுகுறித்து இப்பகுதி விவசாயிகள் கூறுகையில், கடந்த 16 ஆண்டுகளுக்கு பிறகு கண்மாய் தன்னுடைய முழு கொள்ளளவை எட்டி உள்ளது எங்களுக்கு பெரும் மகிழ்ச்சியை அளிக்கிறது என்று கூறினார். இந்நிகழ்ச்சியில் நெற்குப்பை பகுதியை சேர்ந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் மற்றும் பொதுப்பணித் துறையை சேர்ந்த அதிகாரிகள், பேரூராட்சி நிர்வாகிகள் என அனைவரும் பங்கேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.