

நாடாளுமன்றத்தில் மொழிக் கொள்கை குறித்து விவாதிக்க வேண்டும் என்று திமுக எம்.பி கனிமொழி நோட்டீஸ் கொடுத்துள்ளார்.
மத்திய அரசின் புதிய தேசிய கல்விக்கொள்கையை தமிழக அரசு கடுமையாக எதிர்த்து வருகிறது. அதில் உள்ள மும்மொழிக் கொள்கை மூலம் தமிழ்நாட்டில் இந்தியை மத்திய அரசு திணிக்க முயற்சிப்பதாக தமிழகத்தில் உள்ள இந்தியா கூட்டணி கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அத்துடன் மும்மொழிக் கொள்கையை தமிழ்நாடு அரசு ஏற்க மறுத்து வருகிறது. இதனால் மத்திய அரசுக்கும், தமிழ்நாடு அரசுக்குள் மோதல் வலுத்து வருகிறது.
இந்த நிலையில், நாடாளுமன்ற பட்ஜெட் தொடரின் இரண்டாவது பகுதி நேற்று தொடங்கியது. இதில் மும்மொழிக் கொள்கை பிரச்சினையில், திமுக எம்.பிக்கள் நேர்மையாக இல்லை என்றும், தமிழ்நாட்டு மாணவர்களை ஏமாற்றி வருவதாகவும் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் குற்றம் சாட்டினார்.
இதைக்கேட்டு ஆவேசமடைந்த தமிழக எம்.பிக்கள், தர்மேந்திர பிரதான் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து அவையின் மையப்பகுதிக்குச் சென்று முழக்கங்களை எழுப்பினர். இதனால் அவையில் கூச்சல், குழப்பம் ஏற்பட்டது. இதனால் அவை ஒத்திவைக்கப்பட்டது. மேலும் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு எதிராக திமுக எம்.பி. கனிமொழி உரிமை மீறல் நோட்டீஸ் அளித்தார்.
இந்த நிலையில், மொழிக் கொள்கை குறித்து விவாதிக்கக்கோரி நாடாளுமன்றத்தில் கனிமொழி எம்.பி. நோட்டீஸ் அளித்துள்ளார். அத்துடன் நாடாளுமன்ற வளாகத்தில் திமுக எம்.பி.க்கள் இன்று காலை போராட்டத்திலும் ஈடுபட உள்ளதாக கூறப்படுகிறது.

