கமல்ஹாசன் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகிவிட்டதாக பரவும் தகவல் உண்மையில்லை என்று மக்கள் நீதி மய்யம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசனுக்கு சமீபத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அமெரிக்கா சென்று திரும்பிய பின்னர் தனக்கு தொற்று ஏற்பட்டுள்ளதாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.இதனைத் தொடர்ந்து அவர் சென்னையில் உள்ள ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். கமலின் உடல்நிலை குறித்து மருத்துவமனை நிர்வாகம் அவ்வப்போது அறிக்கை வெளியிட்டு வருகிறது. இந்நிலையில், கமல்ஹாசன் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகிவிட்டதாக ஒரு தகவல் இன்று காலை முதல் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. அத்துடன் ஒரு புகைப்படமும் பகிரப்பட்டு வருகிறது.இதனைத் தொடர்ந்து சமூக வலைதளங்களில் பரவும் அந்த தகவலில் உண்மையில்லை என்று மக்கள் நீதி மய்யம் செய்தித் தொடர்பாளர் முரளி அப்பாஸ் தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பு மக்கள் நீதி மய்யம் கட்சியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியாகியுள்ளது.

அதில், “தலைவர் மருத்துவமனையில் இருந்து இன்னும் டிஸ்சார்ஜ் ஆகவில்லை. ஆனால், நலமுடன் இருக்கிறார். விரைவில் பூரண குணமடைந்து வீடு திரும்புவார். வெளியில் உலவும் நிழற்படம் இரண்டு ஆண்டுகளுக்கு முன் அப்போலோ மருத்துவமனையில் கால் அறுவைச் சிகிச்சை முடிந்து தலைவர் வீடு திரும்பியபோது வெளியான புகைப்படம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.