தமிழகத்தின் முதல் பெண் எதிர்கட்சித்தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர், 6 முறை முதல்வர் என தமிழக அரசியலில் அசைக்க முடியாத தலைவியாக இரும்பு பெண்மணியாக உலா வந்த ஜெயலலிதா உடல்நலக்குறைவால் கடந்த 2016ஆம் ஆண்டு டிசம்பர் 5ஆம் தேதி மரணமடைந்தார். அவர் இறந்து 5ஆம் ஆண்டு நினைவு தினம் வருகிற 5ஆம் தேதி அனுசரிக்கப்பட உள்ளது.

இதை முன்னிட்டு அதிமுக கழக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி, வரும் 5ஆம் தேதி காலை 10மணிக்கு மெரினா கடற்கரையில் அமைந்துள்ள ஜெயலலிதாவின் நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செய்ய உள்ளனர்.
கட்சியின் உயர்மட்ட தலைவர்கள் முதல் அடிமட்ட தொண்டர்கள் வரை கலந்துகொள்ள உள்ள இந்த நினைவு அஞ்சலி கூட்டத்தில் உறுதி மொழிகள் எடுக்கப்பட உள்ளன. அந்தந்த மாவட்ட நிர்வாகிகள், அந்தந்த பகுதிகளில் ஜெயலலிதாவின் திருவுருவ படத்துக்கு மாலை அணிவித்தும், மலர் தூவியும் மரியாதை செய்யுமாறு கேட்டுக் கொண்டுள்ளனர்.
இதுமட்டுமின்றி புதுச்சேரி, கேரளா, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, மற்றும் டெல்லி போன்ற பிற மாநில தொண்டர்களும் அம்மாவின் திருவுருவ சிலைக்கு மரியாதை செய்யுமாறு ஓ.பி.ஸ் மற்றும் இ.பி.எஸ் கூட்டு அறிக்கை வெளியிட்டுள்ளனர்.