• Fri. Sep 29th, 2023

அலங்காநல்லூர் அருகே ஜல்லிக்கட்டு மைதானம்.., அமைச்சர் ஏ.வ. வேலு ஆய்வு…

ByKalamegam Viswanathan

Jul 4, 2023

மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் அருகே கீழக்கரை பகுதியில் பிரமாண்ட ஜல்லிக்கட்டு விளையாட்டு மைதானம் அமைக்கப்பதற்கான கட்டுமானப் பணிகளை இன்று (04.07.2023) பொதுப்பணித் துறை, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு, நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து, பொதுப்பணித் துறை, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு, செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில்:-
தமிழ்நாடு முதலமைச்சர், தென்னகப்பகுதியிலே தமிழர்களின் அடையாளமாக விளங்குகின்ற ஜல்லிக்கட்டிப் போட்டிகளுக்கு அனைத்து வசதிகளுடன் கூடிய ஒரு பிரம்மாண்ட அரங்கம் அமைக்கப்படும் என்று கடந்த 21.01.2022-அன்று நடைபெற்ற சட்டமன்ற கூட்டத்தொடரில் அறிவித்தார்கள். அதனடிப்படையில், அலங்காநல்லூர் அருகே கீழக்கரை ஊராட்சியில் 66 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டு ரூபாய்.44.6 கோடி மதிப்பீட்டில் பணிகள் நடைபெற்று வருகின்றன. 77,683 சதுரஅடி பரப்பளவில் இந்த அரங்கம் அமைக்கப்படுகிறது.

இந்த அரங்கில் பிரம்மாண்ட நுழைவுவாயில் தோரணம், 50 ஆயிரம் கொள்ளலவு கொண்ட மேல்நிலை நீர்தேக்க தொட்டி, காளைகள், மாடுபிடி வீரர்கள், காளை உரிமையாளர்களுக்கான ஓய்வு கூடங்கள், செயற்கை நீருற்று, காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்களுக்கான மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சை மையங்கள் என பல்வேறு வசதிகளுடன் அமைக்கப்பட்டு வருகிறது. பொதுப்
பணித்துறையின் தரக்கட்டுப்பாட்டு அலுவலர்கள் கட்டுமானப் பணிகளின் தரம் குறித்து தொடர்ந்து ஆய்வு செய்து தரமான முறையில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கட்டுமானப் பணிகள் 35 சதவிகிதம் நிறைவுபெற்றுள்ளன. டிசம்பர் 2023-க்குள் இக்கட்டுமானப் பணிகள் முழுமையாக நிறைவேற்றிட திட்டமிடப்பட்டுள்ளது. பணிகள் முழுமையாக நிறைவு பெற்ற பின்பு தமிழ்நாடு முதலமைச்சர், இந்த பிரம்மாண்ட ஜல்லிக்கட்டு அரங்கம் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்படும்.
அலங்காநல்லூர் பகுதியிலிருந்து, இந்த ஜல்லிக்கட்டு அரங்கிற்கு வருவதற்கான சாலை மிகவும் குறுகலாக உள்ள காரணத்தால் புதிதாக சாலை அமைப்பதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக ரூபாய் 22 கோடி மதிப்பீட்டில் திட்ட வரைவு தயார் செய்யப்பட்டு விரைவில் ஒப்பந்தப்புள்ளி கோரும் பணிகளை மேற்கொள்ளப்பட உள்ளன. இந்த சாலைக்கான நிலம் கையகப்படுத்தும் பணிகளை துரிதமாக மேற்கொள்ள மாவட்ட நிர்வாகத்திற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஜல்லிக்கட்டு அரங்கம் பணிகள் நிறைவேற்றப்படும் அதே நேரத்தில் சாலை அமைக்கும் பணிகளும் நிறைவேற்றப்படும் என, பொதுப்பணித் துறை, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
முன்னதாக, பொதுப்பணித் துறை, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு , முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு வருகின்ற 15.07.2023-அன்று தமிழ்நாடு முதலமைச்சர் பங்கேற்க உள்ள ”முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் நூற்றாண்டு நூலகம்” திறப்பு விழா நடைபெற உள்ள மதுரை காவல் ஆய்தப்படை மைதானத்தில் விழா முன்னேற்பாடு பணிகள் குறித்து நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வின் போது, மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சௌ.சங்கீதா, மாவட்ட வருவாய் அலுவலர் ர.சக்திவேல், பொதுப்பணித்துறை தலைமைப் பொறியாளர் எஸ்.ரகுநாதன், கண்காணிப்பு பொறியாளர் சத்தியமூர்த்தி உள்ளிட்ட பொதுப்பணித்துறை அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *