• Sun. May 5th, 2024

சேலத்தில் முறிந்து விழுந்த ரயில்வே கிராசிங் கேட்.., வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் அவதி..!

Byவிஷா

Jul 4, 2023

சேலம் அணைமேடு பகுதியில் உள்ள ரயில்வே கிராசிங் கேட் திடீரென முறிந்து விழுந்ததால், வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் பெரும் அவதி அடைந்தனர்.
சேலம் அணை மேடு பகுதியில் ரயில்வே கிராசிங் கேட் உள்ளது. இந்த ரயில் வழித்தடத்தில் சேலம் ஜங்ஷனிலிருந்து சென்னை, விருதாச்சலம், ஆத்தூர், காரைக்கால் செல்ல பல்வேறு ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. மேலும் அவ்வப்போது சரக்கு ரயில்களும் இந்த வழியாக செல்கின்றது.
ரயில்கள் கடக்கின்ற போது லெவல் கிராசிங் கேட் மூடப்படுவது வழக்கம். இந்த நிலையில் இன்று 12 மணியளவில் சேலம் ஜங்ஷனிலிருந்து விருத்தாசலம் வழியாக காரைக்கால் செல்லும் ரயில் வந்தது. அதற்காக லெவல் கிராசிங் போடப்பட்டது. அதன் பிறகு ரயில் கடந்த பிறகு கேட்டை திறக்கும் பொழுது கிராசிங் கேட் முறிந்து கீழே விழுந்தது.
அதிர்ஷ்டவசமாக வாகன ஓட்டிகள் யாரும் இல்லாததால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. இதனை அடுத்து அந்த பாதைகள் அடைக்கப்பட்டு ஆத்தூர் மற்றும் சென்னை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வரும் பேருந்துகள் மற்றும் வாகனங்களை மாற்று பாதையில் சேலம் புதிய பேருந்து நிலையம் செல்வதற்கு அனுமதித்தனர்.
இதனால் மாநகர பகுதிகளில் முள்வாடி கேட் சுந்தர்லாட்ஜ் ஆட்சியர் அலுவலகம் என பல்வேறு பகுதிகளில் அதிக அளவில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. முறிந்து விழுந்த ரயில்வே கிராசிங் கேட்டை சீரமைக்கும் பணியில் ரயில்வே ஊழியர்கள் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. இதே போல அடிக்கடி சேலம் மாநகர பகுதிகளில் உள்ள ரயில்வே கிராசிங் கேட் முறிந்து பழுதடைந்து விழுகிறது.
இதனால் பொதுமக்கள் ரயில்வே கிராசிங் கேட்டை கடக்கின்ற பொழுது அச்சத்துடனே கடக்கின்ற சூழ்நிலை உருவாகியுள்ளது. எனவே சேலம் ரயில்வே கோட்டம் நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து இந்த பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *