• Thu. Apr 25th, 2024

தெலுங்கானா ஆளுநருக்கு அடிக்கப்போகும் ஜாக்பாட் ? ஆலோசனையில் டெல்லி தலைமை

5 மாநில சட்டசபை தேர்தலில் பாஜகவின் எழுச்சி காரணமாக தமிழ்நாட்டை சேர்ந்த முக்கிய அரசியல் புள்ளி ஒருவருக்கு பெரிய லக் அடிக்கலாம் என்று கூறுகிறார்கள்.
உத்தர பிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், மணிப்பூர், கோவா உள்ளிட்ட 5 மாநில தேர்தல் முடிவுகள் வெளியாகி உள்ளன. இதில் பஞ்சாப் தவிர்த்து மற்ற மாநிலங்களில் மீண்டும் பாஜக ஆட்சிக்கு வருகிறது.
பஞ்சாப்பில் காங்கிரஸ் ஆட்சியை வீழ்த்தி ஆம் ஆத்மி அங்கு முதல்முறையாக ஆட்சியை பிடிக்கிறது.

இந்த சட்டசபை தேர்தலில் உத்தர பிரதேசத்தில் பாஜக தனிப்பட்ட பலம் 312ல் இருந்து 255ஆக குறைந்துள்ளது. மணிப்பூரில் 21ல் இருந்து 32ஆக அதிகரித்துள்ளது. கோவாவில் 13ல் இருந்து 20 ஆக உயர்ந்துள்ளது. உத்தரகாண்டில் 57ல் இருந்து 47 ஆக குறைந்துள்ளது. இந்த 5 மாநில சட்டசபை தேர்தலில் வென்றதன் மூலம் பாஜகவிற்கு குடியரசுத் தலைவரை தனியாக தேர்வு செய்வதற்கான வாய்ப்பு கிட்டுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தின் பதவிக் காலம் ஜூலை மாதம் 24-ந் தேதி நிறைவடைகிறது.

இதனால் ஜூலை மாதம் ஜனாதிபதி தேர்தல் நடைபெற உள்ளது. கடந்த முறை பாஜக கூட்டணி சார்பாக முன்னிறுத்தப்பட்ட ராம்நாத் கோவிந்த் பெரும்பான்மை வாக்குகளை பெற்று இந்தியாவின் குடியரசுத் தலைவர் ஆனார். இவருக்கு ஆதரவாக 65.65 சதவிகித வாக்குகள் விழுந்தன. இவரை எதிர்த்து எதிர்க்கட்சிகள் களமிறக்கிய மீரா குமாருக்கு ஆதரவாக 34.35% வாக்குகள் விழுந்தன.

எம்எல்ஏக்கள், எம்பிக்கள் என்று மொத்தம் 2,930 வாக்குகள் ராம்நாத் கோவிந்த்திற்கு ஆதரவாக விழுந்தது. மீரா குமாருக்கு 1,844 வாக்குகள் விழுந்தன. இந்த முறை 5 மாநில தேர்தலுக்கு முன்பாக பாஜகவால் தனியாக குடியரசுத் தலைவரை தேர்வு செய்ய முடியுமா, மாநில கட்சிகளின் ஆதரவு இன்றி குடியரசுத் தலைவரை தேர்வு செய்ய முடியுமா என்ற கேள்வி நிலவி வந்தது. ஏனென்றால் பாஜக இப்போது சிவசேனா, அகாலி தளம் ஆகிய கட்சிகளின் கூட்டணியில் இல்லை.

அதேபோல் தமிழ்நாட்டில் பாஜகவின் கூட்டணியில் உள்ள அதிமுகவிடமும் எம்எல்ஏ பலம் குறைவாக உள்ளது. இதனால் அக்கட்சிக்கு குடியரசுத் தலைவரை தேர்வு செய்ய போதிய பலம் இருக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இப்போது 5 மாநில தேர்தலில் 4ல் வென்று இருந்தாலும் உத்தர பிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப்பில் பாஜக அதிக அளவிலான எம்எல்ஏக்களை இழந்துள்ளது. இதன் மூலம் பாஜகவிற்கு குடியரசுத் தலைவரை தனியாக தேர்வு செய்வதற்கு வாய்ப்பு கிடைப்பது சந்தேகம்தான்.

இதனால் ஒரு சில மாநில கட்சிகளின் உதவியோடு பாஜக இந்த முறை குடியரசுத் தலைவர் வேட்பாளரை முன்னிறுத்தலாம். இதற்காக மாநில கட்சிகளும் ஏற்றுக்கொள்ளும் ஒருவரை பாஜக முன்னிறுத்தும் வாய்ப்புகள் உள்ளன. அப்துல் கலாம் குடியரசுத் தலைவர் ஆனாரோ அதேபோல் எல்லா கட்சிகளும் ஏற்க கூடிய ஒருவரை.. எல்லோராலும் மதிக்கப்பட கூடிய.. பொதுவான ஒரு நபரை பாஜக முன்னிறுத்த உள்ளதாக கூறப்படுகிறது.

அந்த வகையில் 5 மாநில தேர்தல் வந்துள்ள நிலையில், தமிழ்நாட்டை சேர்ந்த ஒரு அரசியல் தலைவருக்கு இந்த வாய்ப்பு வழங்கப்படலாம் என்று கூறப்படுகிறது. தமிழிசை சௌந்தரராஜன் தெலுங்கானா ஆளுநர், புதுச்சேரி துணை நிலை ஆளுநராக இருக்கிறார். இவர் பல கட்சிகளுடன் நட்பாக இருக்க கூடியவர். பலரும் இவரை ஏற்றுக்கொள்ள வாய்ப்புகள் உள்ளன. இதனால் இவரை பாஜக குடியரசுத் தலைவர் பதவிக்கு முன்னிறுத்த வாய்ப்பு உள்ளதாக ஏற்கனவே செய்திகள் வந்தன. இப்போது 5 மாநில தேர்தல் முடிவுகளால் பாஜக பொது வேட்பாளரை களமிறக்க வேண்டிய கட்டாயம் அதிகரித்து உள்ளது. இதனால் தமிழிசைக்கு இந்த வாய்ப்பு வழங்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *