அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட எடப்பாடி பழனிசாமி, பழனி முருகன் கோயிலில் சிறப்பு பூஜையில் கலந்து கொண்டார்.
ஜாதகம், ஜோசியம் மீது அதிக நம்பிக்கை கொண்ட எடப்பாடி பழனிசாமி தான் எந்த ஒரு நிகழ்வில் கலந்து கொண்டாலும் நல்ல நேரம் பார்த்து தான் செயல்படுவார். தற்போது அதிமுகவில் ஏற்பட்டுள்ள பிரச்சனைக்காகவும், தமிழகத்தில் அடுத்த முதலமைச்சராக வருவதற்காகவும் பழனி முருகன் கோயிலுக்கு சென்றுவருமாறு இபிஎஸ்யின் ஆஸ்தான ஜோசியர் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனையடுத்து உலக பிரசித்தி பெற்ற பழனி முருகன் கோயிலில் இபிஎஸ் சாமி தரிசனம் செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இதற்கு முன்னர் நேற்று பழனியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட இபிஎஸ் கூறியதாவது, 14 அமாவாசைகள் சென்று விட்டன. இன்னும் 46 அமாவாசைகள் முடியும் முன்பு 2024-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலோடு சட்டமன்ற தேர்தலும் வருமா என மக்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர் என தெரிவித்தார். மேலும் மக்கள் வருமானமின்றி தவித்து வரும் நிலையில் சொத்து வரி, மின் கட்டண உணர்வு போன்ற வரிச்சுமையை திமுக அரசு அளித்துள்ளதாக குற்றம்சாட்டினார். எனவே இந்த திமுக அரசை விரைவில் வீட்டுக்கு அனுப்ப அனைவரும் பாடுபடுவோம் என தெரிவித்தார்.