• Sat. Apr 27th, 2024

ஆளுநரிடம் அரசியல் குறித்துப் பேசிய நடிகர் ரஜினிகாந்த்..,

Byவிஷா

Aug 8, 2022

தமிழக ஆளுநரை சந்தித்து நடிகர் ரஜினிகாந்த் அரசியல் குறித்துப் பேசியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகம் மட்டுமில்லாமல் நாடு முழுவதும் தனது ஸ்டைலான நடிப்பால் ஏராளமான ரசிகர்களை பெற்றுள்ள ரஜினிகாந்த், அரசியலுக்கு வர இருப்பதாக கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தெரிவித்து இருந்தார். சட்டமன்றத் தேர்தல் தான் தனது இலக்கு என்றும் இப்போ இல்லையென்றால் எப்போதும் இல்லை என கூறினார். இதற்காக ரஜினி ரசிகர்கள் ஆவலோடு தேர்தலை எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்தனர். இந்தநிலையில் கொரோனா பாதிப்பு காரணமாக நாடு முழுவதும் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. அப்போது நடிகர் ரஜினிகாந்திற்கும் உடல் நிலை பாதிப்பு ஏற்பட்டது. இதனையடுத்து திடீர் என ஒரு அறிவிப்பை ரஜினி வெளியிட்டார். அந்த அறிவிப்பில் தனது உடல்நிலை பாதிப்பு காரணமாக அரசியல் களம் இறங்கவில்லையென கூறினார். இதனையடுத்து திரைப்படங்களில் கவனம் செலுத்தி வந்த நடிகர் ரஜினிகாந்த், தமிழக ஆளுநரை திடீரென இன்று சந்தித்து பேசியுள்ளார்.
கடந்த சில மாதங்களாக தமிழக ஆளுநருக்கும், தமிழக அரசுக்கும் மோதல் போக்கு ஏற்பட்டுள்ளது. ஆர்.எஸ்.எஸ் சித்தாத்தங்களை அரசு நிகழ்வுகளில் தமிழக ஆளுநர் ரவி பேசுவதாக குற்றம்சாட்டப்பட்டது. இந்த பரபரப்பான சூழ்நிலைக்கு மத்தியில் நடிகர் ரஜினி காந்த் தமிழக ஆளுநரை சந்தித்து பேசியுள்ளார். இந்த சந்திப்பு மரியாதை ரீதியிலான சந்திப்பாக கூறப்பட்டாலும், தமிழக அரசியல் நிலவரங்கள் தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
ஆளுநர் சந்திப்புக்கு பிறகு போயஸ் கார்டன் இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய நடிகர் ரஜினி காந்த்..,
தமிழக ஆளுநரை மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினேன். தமிழக ஆளுநருடன் 25 நிமிடங்கள் முதல் 30 நிமிடங்கள் வரை பேசினேன். காஷ்மீரில் பிறந்து பெரும்பாலான நாட்கள் வட இந்தியாவிலேயே இருந்துள்ளார். தமிழகத்தை மிகவும் நேசித்து கொண்டுள்ளார். தமிழக மக்களுடைய நேர்மை, கடின உழைப்பு இதெல்லாம் ஆளுநருக்கு மிகவும் பிடித்துள்ளது. மேலும் தமிழகத்தில் உள்ள ஆன்மீக உணர்வு மிகவும் ஈர்த்துள்ளதாகவும் ஆளுநர் குறிப்பிட்டார். தமிழக நல்லதுக்காக என்ன பண்ணுவதற்கும் ஆளுநர் தயாராக இருப்பதாக கூறியதாக ரஜினி தெரிவித்தார். அரசியல் தொடர்பாகவும் ஆளுநரிடம் பேசினார் என்ன பேசினோம் என்பதை வெளியில் கூற இயலாது என குறிப்பிட்டார். மீண்டும் அரசியல் வருவதற்கான திட்டம் இல்லை என்றும் ரஜினி அப்போது தெரிவித்தார்.
மேலும் நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக பேசினீர்களா என்ற கேள்விக்கு அது தொடர்பாக மீடியாவில் பேச முடியாது என தெரிவித்தார். ஜெயிலர் திரைப்படத்திற்கான சூட்டிங் வருகிற 15 அல்லது 22 ஆம் தேதி தொடங்கும் என கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *