• Wed. Oct 16th, 2024

எல்.கே.ஜி படிக்கும் போதே அச்சுறுத்தலை சந்தித்த அதிமுகவிற்கு டாக்டர் பட்டம் பெற்ற பின் சந்திப்பது பெரிய விஷயமல்ல : செல்லூர் ராஜூ

Byகுமார்

Oct 22, 2021

மருது சகோதரர்கள் மற்றும் தேவர் ஜெயந்திக்கு மதுரைக்கு வரும் கழக ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர்களை வரவேற்க வேண்டிய நிகழ்வுகளை பற்றி, மதுரை கோரிப்பாளையம் பகுதியில் உள்ள மதுரை மாநகர் மாவட்ட கழக அலுவலகத்தில் முன்னாள் கூட்டுறவுத் துறை அமைச்சரும் மேற்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினரான செல்லூர் ராஜூ தலைமையில் இன்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

ஆலோசனைக் கூட்டத்தில் வருகின்ற இருபத்தி நான்காம் தேதி தெப்பக்குளம் பகுதியில் உள்ள மருதுசகோதரர்கள் சிலைக்கு மாலை அணிவிக்க வரும் கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ் அவர்களுக்கு வரவேற்பு வழங்குவது குறித்தும், மருது சகோதரர்கள் நினைவு தினத்தை முன்னிட்டு மதுரை மாநகர் மாவட்ட கழக சார்பாக மரியாதை செலுத்துவது குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

மேலும் எதிர்வரும் 30ஆம் தேதி கோரிப்பாளையம் பகுதியில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் முழு உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்ய வரும் கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் ஈ.பி.எஸ் ஆகியோருக்கு வரவேற்பு வழங்குவது குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த செல்லூர் ராஜூ, அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் ஜெயந்தி விழாவில் கலந்து கொண்டு மரியாதை செய்ய உள்ளனர் என்றும், தமிழக அரசின் வழிகாட்டு நெறிமுறைகளின் படி  சமுக இடைவெளியுடன் முக கவசங்கள் அணிந்த படி இந்த நிகழ்ச்சிகளில் கட்சிப் பிரமுகர்கள் கலந்து கொள்வார்கள் என்று தெரிவித்தார். மதுரை மாவட்ட ஆட்சியர் மற்றும் மாநகராட்சி ஆணையாளர்கள் தெரிவிக்கும் வழிகாட்டு நெறிமுறைகளின்படி நிகழ்வுகள் நடைபெறும் என்றார்.

மேலும் முன்னாள் அமைச்சர்கள் வீடுகளில் நடைபெறும் சோதனைகள் குறித்த கேள்விக்கு, முன்னாள் அமைச்சர்கள் வீடுகளில் நடைபெறும் சோதனைகள் குறித்து அதிமுகவினர் கவலைப்படவில்லை என்றார். கருணாநிதி காலத்திலேயே சோதனைகளை சந்தித்து உள்ளோம். 

எல்.கே.ஜி படிக்கும் போதே அச்சுறுத்தலை சந்தித்த அதிமுகவிற்கு  தற்போது டாக்டர் பட்டம் பெற்ற பின் அடக்குமுறையை சந்திப்பது பெரிய விஷயமல்ல என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *