இஸ்ரோ 100வது ராக்கெட்டை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தி சாதனை படைத்தது.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ இன்று தனது 100வது ராக்கெட்டை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியுள்ளது. ஜிஎஸ்எல்வி-எப்15 ராக்கெட்டை இஸ்ரோ விண்ணில் செலுத்தியுள்ளது. இந்த ராக்கெட் மூலம் என்.வி.எஸ்-02 என்ற செயற்கைக்கோள் ஏவப்பட்டுள்ளது. இந்த செயற்கைக்கோள் இன்று காலை 6.23 மணிக்கு ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இஸ்ரோ மையத்தில் இருந்து ஏவப்பட்டது.
என்விஎஸ் செயற்கைக்கோள் 2,250 கிலோ எடை உடையது. இதன் ஆயுட்காலம் 10 ஆண்டுகள். இதில் எல் 1, எல் 5, மற்றும் எஸ் பேண்ட் டிரான்ஸ்பான்டர்கள், உள்நாட்டு தொழில்நுட்பத்தில் தயாரான அணு கடிகாரம் உட்பட்ட பல்வேறு மேம்படுத்தப்பட்ட அதிநவீன தொழில்நுட்ப கருவிகள் இடம் பெற்றுள்ளன. செயற்கைக் கோள்களுடன் சேர்ந்து தரை, கடல், வான்வெளி போக்குவரத்தை இது கண்காணிக்கும். மேலும், பேரிடர் காலங்களில் துல்லிய தகவல்களைத் தெரிவிக்கும் என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.