• Thu. Apr 25th, 2024

உதயநிதி ஸ்டாலின் அமைச்சரவையில் இடம் பெறுகிறாரா..?

Byவிஷா

Jul 1, 2022

உதயநிதி ஸ்டாலினை அமைச்சரவையில் இடம்பெற வைப்பது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் உளவுத் துறையிடம் சீக்ரெட் சர்வே ரிப்போர்ட் கேட்டுப் பெற்றுளதாக தகவல் வெளியாகி, அரசியல் வட்டாரத்தைப் பரபரப்பாக்கியுள்ளது
உதயநிதி ஸ்டாலினை அமைச்சராக்குங்கள் என்று முதல் குரல் கொடுத்தது, அவரது நண்பரான பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தான். அவர்தான் முதன்முதலாக பொதுவெளியில் இது தொடர்பான விவாதத்தை தொடங்கி வைத்தார். அதைப் பின்தொடர்ந்து மூத்த அமைச்சர்கள் முதல் அமைச்சரவைக்கு புதிதாக சென்றவர்கள் வரை உதயநிதியை அமைச்சராக்குமாறு பேட்டியளிக்கத் தொடங்கினர். உதயநிதிக்கு எந்த துறை வழங்கப்படும், எப்போது வழங்கப்படும் என்ற கேள்விகள் சுழன்று வந்தன.
உதயநிதி கமிட்டாகியிருக்கும் திரைப்படங்களின் படப்பிடிப்புகளை முடித்த பின்னர் பதவியேற்க சொல்லலாம் என்று முதல்வர் ஸ்டாலினும் கூறிவந்ததாக சொல்லப்பட்டது. மே அல்லது ஜூன் மாதம் பதவியேற்பு இருக்கும் என்றும் தகவல்கள் வெளியாகின. ஆனால் திட்டமிட்டபடி உதயநிதி திரைப்படங்களின் படப்பிடிப்பு இன்னும் முடிந்தபாடில்லை.
இதற்கிடையே உதயநிதியை அமைச்சராக்குவது தொடர்பாக மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்று அறிய நினைத்த ஸ்டாலின் உளவுத்துறையிடம் கூறி ஒரு சீக்ரெட் சர்வே எடுக்க சொல்லியுள்ளார். அதன் முடிவுகள் அதிர்ச்சியளிக்கும் வகையில் அமைந்துள்ளன. உதயநிதியை அமைச்சராக்கினால் ஸ்டாலின் தனது குடும்பத்துக்கே அதிக முக்கியத்துவம் அளிக்கிறார் என்று மக்கள் நினைப்பார்கள் என்று சொல்லப்பட்டுள்ளதாம்.
ஸ்டாலின் எந்த முக்கிய முடிவெடுக்க வேண்டும் என்றாலும் தனது ஆலோசகர்கள் சிலரிடம் ஒரு வார்த்தை கேட்பதை வாடிக்கையாக வைத்துள்ளார். அந்த வகையில் அவர்களிடம் கேட்டதற்கும் எதிர்மறையான கருத்துக்களே வந்துள்ளன. திமுக மீது வழக்கமாக முன்வைக்கும் வாரிசு அரசியல் விமர்சனத்தை எதிர்கட்சிகள் தீவிரமாக முன்னெடுக்கத் தொடங்கிவிடுவார்கள். மக்களவைத் தேர்தலுக்கு இன்னும் இரண்டு ஆண்டுகள் கூட இல்லாத நிலையில் அதற்கு வழியமைத்து கொடுத்துவிடக்கூடாது. கட்சிக்குள்ளும் தேவையற்ற கலகங்களை உருவாக்கும் என்று சொல்லப்பட்டுள்ளது.
இதுஒரு புறமிருக்க ஸ்டாலின் தனது குடும்பத்திலிருந்து இதுதொடர்பாக அழுத்தத்தையும் சந்திப்பதாக சொல்கிறார்கள். ஆட்சிக்கு வந்து ஒரு ஆண்டுக்கு மேலாகியும் ஏன் இன்னும் அமைச்சரவையில் இடம் தரமறுக்கிறீர்கள்? இந்த விவகாரம் தொடர்பாக நிறைய விவாதங்கள் பொதுவெளியில் நடைபெற்று முடிந்துவிட்டன. அனைத்து தரப்புமே உதயநிதி பதவியேற்பு எப்போது என எதிர்பார்க்கத் தொடங்கிவிட்டார்கள் இனி எதிர்ப்பு இருக்காது என குடும்பத்தினர் வலியுறுத்திவருகிறார்கள். அனைத்து தரப்பு கருத்துக்களை கேட்ட முதல்வர் என்ன முடிவெடுக்கப் போகிறார் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *