• Sun. Jul 21st, 2024

குறிவைக்கப்படுகிறதா கொங்கு மண்டலம்.. அதிர்ச்சியில் மக்கள்!..

By

Aug 23, 2021

திமுக அரசு ஆட்சி அமைத்த பின்னர் தமிழகம் முழுவதும் மேற்கொள்ளப்பட்ட அதிரடி நடவடிக்கைகளால் கொரோனா 2வது அலை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் கொரோனா கட்டுக்குள் கொண்டு வரப்பட்ட நிலையில், காவிரி பாயும் டெல்டா மாவட்டங்களில் கொரோனா மிக, மிக மெதுவாக குறைந்தது மக்களை அச்சத்தில் ஆழ்த்தியது.

கொரோனா தொற்று எண்ணிக்கையில் சென்னையையே பின்னுக்கு தள்ளி, கோவை, ஈரோடு, சேலம் மாவட்டங்கள் முதல் மூன்று இடங்களை பிடித்தன. கோவையில் கடந்த மார்ச் மாதம் வரை தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை குறைவாகவே இருந்து வந்தது. மார்ச் மாத இறுதியில் கொரோனா தொற்றின் 2வது அலை பரவ தொடங்கியதும் மாவட்டத்தில் தொற்று எண்ணிக்கையும் கிடுகிடுவென உயரத் தொடங்கியது. ஏப்ரல் 1ம் தேதியில் இருந்தே கொரோனா தொற்று மாவட்டத்தில் நகர் பகுதி மட்டுமின்றி கிராம பகுதிகளிலும் மின்னல் வேகத்தில் பரவ தொடங்கியது. முதலில் 100 என்ற எண்ணிக்கையில் ஆரம்பித்த தொற்று எண்ணிக்கை இறுதியில் இதுவரை இல்லாத உச்சமாக 4,700-யை தாண்டி சென்றது.

கோவையில் கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த முடியாமல் திணறியதால் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினே இரண்டு முறை நேரடியாக கள ஆய்வு நடத்தும் அளவிற்கு நிலைமை மோசமடைந்தது. கோவை, ஈரோடு, திருப்பூர், நாமக்கல், கரூர், திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் கொரோனா தொடர்ந்து அதிகரித்து வருவது திமுகவின் காழ்ப்புணர்ச்சி காரணமாகவா? என்ற ஐயமும் மக்கள் மனதில் தலைதூக்கியுள்ளது.

கொரோனா 2வது அலை சற்றே குறையத் தொடங்கிய நிலையில், தற்போது மீண்டும் கொங்கு மண்டலத்தை குறிவைத்து தாக்க ஆரம்பித்துள்ளது. இதற்கு காரணம் தொழில் நகரமான கோவை, திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட பகுதிகளுக்கு பல மாநில மக்கள் படையெடுப்பதா?, இல்லை தேர்தலில் திமுகவை மண்ணைக் கவ்வ வைத்து, மீண்டும் அதிமுகவின் கோட்டை என நிரூபித்ததால் கொங்கு மண்டல மக்களுக்கு கொடுக்கப்படும் தண்டனையா? என்ற அச்சம் மக்களிடையே எழுந்துள்ளது. ஏனென்றால் கொரோனா முதல் அலையின் போது அதிமுக ஆட்சியில் இருந்தது. அப்போது மே 24-ம் தேதி நிலவரப்படி கொரோனா பாதிப்பில் மொத்தமுள்ள 16,000-ல் சென்னையின் பங்கு மட்டும் 10,000-க்கும் அதிகம் இருந்தது. ஆனால் கோவை, ஈரோடு, நீலகிரி, திருப்பூர், சேலம் ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய கொங்கு மண்டலம் கொரோனா பாதிப்பே இல்லாத பச்சை மண்டலத்துக்கு மாறி இருந்தது.

கொரோனா பாதிப்புப் பட்டியலில் முதல் 10 இடங்களில் கொங்கு மண்டலத்திலிருந்து ஒரு மாவட்டம் கூட இல்லை. அதிலும் கோவையில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு போஸ்டர் அடித்தும் ஒட்டும் அளவிற்கு கொரோனா நடவடிக்கை குறித்து மக்கள் புகழ்ந்து தள்ளினர். கொங்கு மண்டலம் அதிமுக-வின் கோட்டை என்பதால், வர உள்ள சட்டமன்றத் தேர்தலை மனதில் வைத்து முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் தலைமையில் குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்த அமைச்சர்கள் களப்பணி நடத்தி வருவதாகவும், உண்மையிலேயே கொங்கு மண்டலம் பச்சை மண்டலமாக மாறிவிட்டதா? அல்லது அரசியலுக்காக மார்க்கெட்டிங் டெக்னிக்கா என எதிர்க்கட்சிகள் அதிமுகவை விமர்சித்து வந்தனர்.

ஆனால் இப்போது தலைமை அப்படியே தலைகீழாக மாறியுள்ளது. கொங்கு மண்டலத்தில் மே மாதம் வரை கட்டுக்குள் இருந்த கொரோனா முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதவியேற்ற பிறகு அதிகரிக்க ஆரம்பித்துள்ளது. நேற்றைய நிலவரப்படி மட்டுமே பார்த்தோம் என்றால் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 25 லட்சத்து 99 ஆயிரத்து 255 ஆகும், கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 1,652 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் சென்னையைச் சேர்ந்தவர்கள் 183 பேர். ஆனால் முதலிடத்தில் கோவை மாவட்டம் தான் உள்ளது. நேற்று ஒரே நாளில் மட்டும் கோவையில் 205 பேரும், ஈரோட்டில் 152 பேரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனா 2வது அலை மீண்டும் தலைதூக்க ஆரம்பித்ததில் இருந்தே சென்னையில் கொரோனா குறைவதும், கோவையில் தொடர்ந்து அதிகரிப்பதும் மர்மமாகவே நீடித்து வருகிறது. சென்னைப் போன்ற பல மாவட்ட மற்றும் மாநில மக்கள் வாழும் பெருநகரத்தில் கொரோனாவைக் கட்டுப்படுத்த முடிந்த தமிழக அரசால், கொங்கு மண்டலத்தை கடைக்கண் கொண்டு கூட பார்க்க முடியவில்லையா? என அப்பகுதி மக்கள் கதறி வருகின்றனர். தமிழக சட்டமன்ற தேர்தலில் கொங்கு மண்டலத்தில் திமுக தோல்வியை தழுவியதால் பழிவாங்கும் நடவடிக்கையை கட்டவிழ்த்துவிட்டது அப்பட்டமாக தெரிகிறது. கொரோனா 2வது அலையால் படாதபாடு பட்ட கோவை மக்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்வதில் அதிக கவனம் செலுத்தி வருகின்றனர். நள்ளிரவு முதலே மழை, வெயில் பாராமல் வரிசையில் நின்று தடுப்பூசி செலுத்தி வருகின்றனர். அப்படியிருக்க அங்கு மட்டும் எப்படி கொரோனா தொற்று குறையாமல் இருக்கிறது என்பது புரியாத புதிராக நீடிக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *