• Thu. Apr 25th, 2024

மேட் இன் சீனாதான் புதிய இந்தியாவா?

தெலங்கானாவில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள ராமானுஜர் சிலை சீனாவில் தயாரிக்கப்பட்டதாக குறிப்பிட்டு, மேட் இன் சீனா தான் புதிய இந்தியாவா என காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி ட்விட் செய்துள்ளார்.

11ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த வைணவ சமய துறவி ஸ்ரீ ராமானுஜசாரியாவின் சிலையை தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில், பிரதமர் நரேந்திர மோடி சனிக்கிழமை திறந்து வைத்தார். ‘சமத்துவத்திற்கான சிலை’ (Statue of equality) என்று அழைக்கப்படும் இந்த சிலை ஹைதராபாதில் உள்ள சின்ன ஜீயர் சுவாமி ஆசிரமத்துக்கு சொந்தமான 40 ஏக்கர் பரப்பளவிலான நிலத்தில் சுமார் 216 அடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ளது.

ரூ.1,000 கோடி மதிப்பீட்டில்தங்கம், வெள்ளி, காப்பர், பிராஸ் மற்றும் டின் ஆகிய ஐந்து வகை உலோகங்களால் இந்த சிலை உருவாக்கப்பட்டுள்ளது. 54 அடி உயரம் கொண்ட மூன்று அடுக்கு கட்டுமானத்தின் மீது மாபெரும் தாமரை அமைத்து அதன் மேலே இந்த சிலை அமர்ந்த நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

சிலைக்கு கீழே உள்ள கட்டடத்தின் தரைதளத்தில் 63,444 சதுர அடியில் அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது. அங்கு ராமானுஜரின் வாழ்க்கை மற்றும் அவரது தத்துவங்களை பிரதிபலிக்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. மூன்றாவது தளத்தில் 14,700 சதுர அடியில் வேதிக் டிஜிட்டல் நூலகமும், ஆராய்ச்சி மையமும் இடம்பெற்றுள்ளது. தாமரை இடம்பெற்றுள்ள பகுதிக்கு பத்ராவதி என்று பெயரிடப்பட்டுள்ளது. சிலையை சுற்றியுள்ள 34 ஏக்கர் பரப்பளவில் 108 திவ்ய தேசங்களின் சிலைகள் நிறுவப்பட்டுள்ளன.

இந்நிலையில், இந்த சிலை சீனாவில் தயாரிக்கப்பட்டுள்ளதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், சமத்துவத்துக்கான சிலை சீனாவில் தயாரிக்கப்பட்டுள்ளது. சீனா தயாரிப்புதான் புதிய இந்தியாவா? என்று கேள்வி எழுப்பியுள்ளார். சில ஆண்டுகளுக்கு முன்பு குஜராத்தில் உலகின் மிகப்பெரிய சிலையான சர்தார் வல்லபபாய் பட்டேல் சிலை திறந்துவைக்கப்பட்டது. இந்த சிலையும் சீனாவில் தயாரிக்கப்பட்டது என்று ராகுல் காந்தி விமர்சித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *