மதுரையை ஆட்டிப்படைத்த முன்னாள் மாண்புமிகு-வை ஆட்டம் காணவைத்த ஐபிஎஸ் அதிகாரி அஸ்ரா கார்க்கை தென் மண்டல ஐஜி-யாக தமிழக அரசு நியமித்து இருக்கிறது.
திருநெல்வேலி,மதுரையில் சிறப்பாக பணிசெய்தவர்.கீரிப்பட்டி,பாப்பாபட்டி கிராமங்கள் தேர்தல் அமைதியாக நடக்க முக்கிய காரணமானவர்.
தென்மண்டல ஐ.ஜி.,ஆக பொறுப்பேற்றிருக்கும் ஐ.பி.எஸ்., அதிகாரி அஸ்ரா கார்க் செய்த சம்பவம், இன்றும், என்றும் மறக்க முடியாத ஒன்று. அந்த சம்பவம் குறித்து பார்க்கலாம்.
மதுரை திருப்பாலை பகுதியைச் சேர்ந்தவர் உஷாராணி. இவரது கணவர் ஜோதிபாசு என்கிற வீரணன். சம்பவத்தன்று, தனது மகளிடம், தகாத முறையில் நடந்து கொள்ள ஜோதிபாசு முயன்றுள்ளார். அதை தடுக்க முயன்ற உஷாராணிக்கும், ஜோதிபாசுவுக்கும் கடும் சண்டை ஏற்படுகிறது. இதில் மகளை பாதுகாக்க , கணவர் ஜோதிபாசுவை கிரிக்கெட் பேட்டால் தாக்கினார் உஷாராணி. அதில் சம்பவ இடத்திலேயே ஜோதிபாசு உயிரிழந்தார்.
அன்றைய மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்(எஸ்.பி.,) அஸ்ரா கார்க், நேரடியாக விசாரணையில் இறங்கினார். உஷா ராணி அளித்த வாக்குமூலத்தை உறுதி செய்யும் விதமாக, சம்மந்தப்பட்ட அந்த இளம் பெண்ணை, மருத்துவமனைக்கு அழைத்து வந்து பரிசோதனை நடத்தினர். அதில், அந்த பெண்ணின் மீது கீறல்கள் மற்றும் காயங்கள் இருந்தது. அதை அவரது தந்தை ஜோதிபாசு தான் ஏற்படுத்தினார் என்பதும் தெரியவந்தது.
வழக்கமாக இது போன்ற வழக்குகளில், என்ன காரணம் கூறப்பட்டாலும், கொலை குற்றவாளி என்கிற முறையில், கொலையாளி கைது செய்யப்பட்டு, சிறைக்கு அனுப்பப்படுவது வழக்கம். ஆனால், இந்த வழக்கில் அஸ்ரா கார்க், புதிய புரட்சியை செய்தார். இந்திய தண்டனை சட்டம் 100, 120 பிரிவுகளின் படி, பெண்கள் தங்களை தற்காத்து கொள்ள கொலை செய்தால், அது கொலையாகாது என்கிற விதி உள்ளது. அதை பயன்படுத்தினார் அஸ்ரா கார்க். கொலை வழக்கில் இருந்து உஷாராணியை விடுவித்தார் அஸ்ரா கார்க். சம்பவம் நடந்த நாள்… 2012 பிப்ரவரி 12.
பெண்களின் தற்காப்புக்காக அரசியல் சட்டம் அளித்துள்ள உரிமை இது. குற்றத்திற்கான முகாந்திரம் உறுதியாக தெரிந்ததால், இந்த முடிவுக்கு வந்தோம். சட்டத்தின் படி தான் அவர் விடுதலை செய்யப்பட்டார்’’ என்று அஸ்ரா கார்க் பேட்டியளித்தார்.
அதற்கு பிறகு தான், இப்படி ஒரு சட்டம் இருப்பதும், போலீசாரே கொலையாளியை விடுவிக்கலாம் என்பதும் தெரியவந்தது.