தமிழகத்தில் 2022- 2023 ஆம் ஆண்டுக்கான முழு நிதி நிலை அறிக்கையானது நாளை தாக்கலாகிறது. இந்த நிலையில் தொழில்துறையினரின் எதிர்பார்ப்புகள் பூர்த்தி செய்யப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
தமிழகத்தில் 2022- 2023 ஆம் ஆண்டுக்கான முழு பட்ஜெட் நாளை தாக்கலாகிறது. கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் உலகையே புரட்டி போட்ட கொரோனா பெருந்தொற்றால் தொழில்துறை, சினிமா துறை, சுற்றுலா துறை என பல துறைகள் கடும் பாதிப்பைச் சந்தித்துள்ளன.
அந்த வகையில் தமிழகத்தில் தொழில்துறை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. தொழில்வளம் அதிகமாக உள்ள மாவட்டங்களில் ஒன்றான கோவை மாவட்டத்தில் முடங்கிய தொழில்களை மீட்டு கொண்டு வர தாட்கோ வங்கிகள் மூலம் எளிய முறையில் கடன் வசதி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
அது போல் பம்புசெட்டுகள் தயாரிப்பில் 55 சதவீத பம்பு செட்டுகள் கோவையில் மட்டுத்தில்தான் தயாரிக்கப்படுகின்றன. இதனால் பம்பு செட் தொழில் வர்த்தகத்தை அதிகரிக்கவும் அதனை நம்பியுள்ள சிறு குறு தொழில் நிறுவனங்களை மேம்படுத்தவும் தனியாகத் தொழிற்பேட்டை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. கடந்த சில மாதங்களாக காப்பர், அலுமினியம், ஸ்டீல் உள்ளிட்ட மூலப்பொருள்களின் விலை 50 சதவீதம் வரை அதிகரித்துள்ளது. இத்தகைய மூலப்பொருட்களின் விலையேற்றத்தைக் கட்டுக்குள் கொண்டு வர ஐஏஎஸ் அதிகாரி தலைமையில் ஒரு கமிட்டி அமைக்கப்பட வேண்டும்.
மத்திய அரசுடன் இணைந்து மூலப்பொருட்களின் விலை ஏற்றத்தைக் கண்காணித்துத் தீர்வு காணும் வகையில் திட்டங்கள் செயல்படுத்தப்பட வேண்டும் என தொழில் துறையினர் எதிர்பார்க்கிறார்கள். கோடைக்காலம் நெருங்கி வரும் நிலையில் மின்சார தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது.
இதனால் தொழிற்சாலைகள் இயங்குவதில் சிரமம் உள்ளது. கடந்த 2006 ஆம் ஆண்டு திமுக ஆட்சியில் அவ்வப்போது அறிவிக்கப்படாத மின் வெட்டு இருந்ததாக விமர்சனங்கள் உண்டு. நேற்று கூட பாஜக தலைவர் அண்ணாமலை, கோடைக்காலம் வந்துவிட்டது. இனி மின்வெட்டு ஏற்படலாம். ஜெனரேட்டர் வாங்கி வைத்துக் கொள்ளுங்கள் என திமுக அரசை விமர்சித்திருந்தார்.
எனவே மின்வெட்டை தவிர்க்கும் வகையில் காற்றாலை மற்றும் சூரிய சக்தி மின்சாரம் உள்ளிட்ட மாற்றுத் திட்டங்களை ஊக்குவிக்க நிதி ஒதுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது. கோவை பெருநகர வளர்ச்சி மேம்பாட்டு ஆணையம் அமைக்க வேண்டும். புதிய ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு பிணையின்றி கடன் உதவி வழங்குதல் வேண்டும்.
இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரை சிறு குறு தொழிற்சாலைகளுக்கு இலவச மின்சாரம், கோவையை மின் வாகன மோட்டார் தயாரிப்பு மையமாக அறிவிக்க வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளுடன் தொழிற்துறையினரும் தொழில் அமைப்புகளும் எதிர்பார்ப்பில் காத்திருக்கிறார்கள். இவர்களின் எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகுமா என்பது நாளை தெரியும்.