

தமிழர்களின் நிலையைக் கண்டறிய 4 நாட்கள் பயணமாக இலங்கை சென்றார் பாஜக தலைவர் அண்ணாமலை.. இலங்கையை நெருக்கடியில் இருந்து மீட்க இந்தியா தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கிறது எனவும் அண்ணாமலை கூறியுள்ளார்.
கடும் பொருளாதார சிக்கலில் உள்ள இலங்கை மக்களுக்கு உணவு, அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் உயிர்காக்கும் மருந்துகளை தமிழ்நாட்டிலிருந்து அனுப்பி வைக்க உரிய அனுமதிகளை வழங்கிட மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்திற்கு உத்தரவிடுமாறு கோரி, பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதினார். இந்நிலையில் அண்ணாமலை இலங்கை சென்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்’ ஏற்பாடு செய்த மே 1- உழைப்பாளர் தின நிகழ்ச்சியில் பேசிய அவர், “இந்தியாவில் நடைபெறும் பிரதமர் நரேந்திர மோடியின் ஆட்சியை இந்த உலகமே வியந்து பார்க்கிறது. உலகளவில் இந்தியா 5-வது பெரிய பொருளாதாரமாக உருவெடுத்துள்ளது. உக்ரைனில் போரினால் பாதித்த பகுதியிலிருந்து இந்தியர்கள் ஒருவரைக் கூட விடாமல் பிரதமர் மோடி பத்திரமாக மீட்டெடுத்தார். இலங்கை, எங்களின் அண்டைநாடு. இங்கு வாழும் மக்கள் எம் சொந்தங்கள். அதனால் தான் நாங்கள் இலங்கைக்கு உதவிக்கரம் நீட்டுகிறோம். மலையக மக்களுக்கான இந்தியாவின் உதவி இனியும் தொடரும். இங்குள்ள மக்களின் கல்வித் தரத்தை உயர்த்துவோம்.
இலங்கையில் இப்போதைய பொருளாதர நெருக்கடி நீண்டகாலம் நீடிக்காது. இந்த நிலைமை விரைவில் மாற வேண்டும் என நான் இறைவனை வேண்டுகிறேன். இலங்கையை நெருக்கடியில் இருந்து மீட்க இந்தியா தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கிறது. சஞ்சீவி மலையை அனுமன் சுமந்தது போல் இலங்கையின் பொருளாதார நெருக்கடியை சுமக்க பிரதமர் மோடி தயாராக இருக்கிறார் ” என்றார்.
மேலும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸை தொடங்கிய சவுமியமூர்த்தி தொண்டைமான், மலையக தமிழருக்கு மட்டுமல்ல தமிழக தமிழருக்கும் வழிகாட்டியாக திகழ்ந்தவர் என்று புகழ்ந்து பேசினார். சவுமியமூர்த்தி குரல் அற்றவர்களின் குரலாக ஒலித்தவர். அவர் வழியில் வந்த ஆறுமுகம் தொண்டைமானும் மக்கள் உரிமைகளுக்காகப் போராடினார் என்று பாராட்டிப் பேசினார்.
தனது 4 நாட்கள் பயணத்தை முடித்துக் கொண்டு தாயகம் திரும்பிய பின்னர் இலங்கை தமிழர்களின் நிலை குறித்து பாஜக தலைமையகத்துக்கு விரிவான அறிக்கை தாக்கல் செய்கிறார் அண்ணாமலை.
