இந்திய – பாக். எல்லை கிராமத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ‘டிபன்பாக்ஸ்’ வெடிகுண்டை பஞ்சாப் போலீசார் அதிரடியாக மீட்டனர்.
தீபாவளி தினத்தன்று தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தக்கூடும் என்று உளவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதையடுத்து இந்திய – பாகிஸ்தான் எல்லை அருகே அமைந்துள்ள அலி கே கிராமத்தில் பஞ்சாப் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது விவசாய நிலங்களில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ‘டிபன்பாக்ஸ்’ வெடிகுண்டை பஞ்சாப் போலீசார் மீட்டனர்.
இதுகுறித்து பஞ்சாப் காவல்துறை கூறுகையில், ‘ஜலாலாபாத் குண்டுவெடிப்பு வழக்கில் தொடர்புடைய இருவரை போலீசார் கைது செய்தனர். இவர்கள், ஜலாலாபாத் நகரில் செப். 15ம் தேதி நடந்த மோட்டார் சைக்கிள் குண்டுவெடிப்பு வழக்கில் தொடர்புடையவர்கள். அவர்களிடமிருந்து ஒரு டிபன்பாக்ஸ் வெடிகுண்டு, இரண்டு பென் டிரைவ்கள் மற்றும் ரூ.1.15 லட்சம் ரொக்கம் கைப்பற்றப்பட்டது.
இந்த வழக்கின் விசாரணைகளின் போது, இவர்கள் மற்றொரு டிபன்பாக்ஸ் வெடிகுண்டு வைத்திருப்பதாக தெரிவித்தனர். அவர்கள் அளித்த தகவல்களின்படி, விவசாய வயல்களில் மறைத்து வைத்திருந்த வெடிகுண்டு டிபன்பாக்சை கைப்பற்றினோம். இந்த வழக்கில் மேலும் விசாரணை நடந்து வருகிறது. மேலும் சிலர் கைது செய்யப்படலாம்’ என்றார்.
கடந்த சில மாதங்களுக்கு முன் அமிர்தசரஸ் ரூரல், கபூர்தலா, ஃபாசில்கா, டார்ன் தரன் ஆகிய இடங்களில் டிபன்பாக்ஸ் வெடிகுண்டுகள் மீட்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.